செமினாருக்காக போன இடத்தில்.. இஸ்ரேலில் சிக்கிக் கொண்ட திருச்சி பேராசிரியை!
திருச்சி: இஸ்ரேலில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற திருச்சியைச் சேர்ந்த வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியை டாக்டர் எஸ். ராதிகா என்பவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரை மீட்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியில், அக்ரானமி துறையில் உதவிப் பேராசிரியையாக இருப்பவர் டாக்டர் எஸ். ராதிகா. திருச்சி கருமண்டபம் பதகுதியைச் சேர்ந்தர். இஸ்ரேலில் நடைபெறும் சொட்டுநீர் பாசனம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இவர் இஸ்ரேல் சென்றிருந்தார். இந்த நேரத்தில்தான் ராதிகா உள்ளிட்டோர் அங்கு மூண்ட ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேல் போர்ச்சூழலில் மாட்டிக் கொண்டனர்.
டாக்டர் ராதிகா பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இஸ்ரேலில் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதால் ராதிகாவின் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலையுடன் உள்ளனர்.
இந்த நிலையில் டாக்டர் ராதிகாவை மீட்பது தொடர்பாக கல்லூரி முதல்வர் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் டாக்டர் ராதிகாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பியுள்ளனர்.
படிப்படியாக அனைத்து இந்தியர்களும் இஸ்ரேலிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் நாட்களில் டாக்டர் ராதிகாவும் மீட்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் காஸா நகருக்கு அருகே உள்ள பகுதியில் மாட்டிக் கொண்டிருப்பதால் மீட்பு முயற்சிகளில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.