தொழில்துறையில் ரத்தினமாக ஜொலித்தவர் ரத்தன் டாடா.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Manjula Devi
Oct 10, 2024,10:10 AM IST

மும்பை:   பிரபல தொழிலதிபரான ரத்தன் டாட்டா நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குப் பலரும்  தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


டாடா குழும தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு கடந்த புதன்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 86 வயதான இவர் வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மும்பையில் காலமானார். 


அவரது உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் வைக்கப்படவுள்ளது. இதற்காக மகாராஷ்டிரா அரசு இன்று ஒரு நாள் நிகழ்ச்சி முழுவதையும் ரத்து செய்துள்ளது. அதேபோல் ஜார்கண்ட் மாநிலமும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 




டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் முக்கிய நட்சத்திரங்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கல் செய்திகளையும் பதிவிட்டும் வருகின்றனர். 


முதல்வர் மு க ஸ்டாலின்: 


தொழில்துறையில் இரத்தினமாக ஜொலித்த திரு. ரத்தன் டாடா அவர்கள் காலமானார். அவரின் தொலைநோக்கு சிந்தனைகளும், சமூக பொறுப்புடன் ஆற்றிய பணிகளும் என்றும் நிலைத்து நிற்கும். ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: 


உலகப்புகழ் பெற்ற தொழில் வணிக நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர்  ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.  இந்தியாவின் தொழில் வணிக வரலாற்றையும், தாராளமயமாக்கல் வரலாற்றையும் ரத்தன் டாட்டா அவர்களை விலக்கி விட்டு எழுத முடியாது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1992-ஆம் ஆண்டில்  டாட்டா குழுமத்தின்  தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாட்டா  தமது குழுமத்தை  உலகம் முழுவதும் பரப்பினார். கல்வி, சுகாதாரம், துப்புறவு உள்ளிட்டவற்றுக்காக வாரி வழங்கியவர். முக்கியத் துறைகளில் இந்தியாவின் கொள்கைகளை வகுக்க துணை நின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய ரத்தன் டாட்டா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.


பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:


இந்தியாவின் புகழ்பெற்ற டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும், வணிகத்தில் அறத்தைக் கடைபிடித்தவருமான ரத்தன் டாட்டா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்த ரத்தன் டாட்டா, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தாலும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்தவர். ஏழைகளுக்கும் மகிழுந்து கிடைக்க வேண்டும் என்று போராடியவர். அவரது மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.  இந்தியத் தொழில்துறையில் அறம் என்றால் ரத்தன் டாட்டாவின் பெயர் தான் நினைவுக்கு வரும் என்ற அளவுக்கு வரலாற்றில் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.


அமமுக தலைவர் டிடிவி தினகரன்: 


இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும்.


எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மையை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்த திரு.ரத்தன் டாடா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


நடிகர் நெப்போலியன்:


உலகம் போற்றும் உத்தமர்,

இந்தியாவின் உண்மையான  

நீண்ட நாள் கதாநாயகன்,

தலைச்சிறந்த 

தொழில் அதிபர், 

உலகமே வியக்கும்

சிறந்த நிர்வாகி,

மனிதநேயமிக்க மாமனிதர், 

திரு. ரத்தன் டாட்டா அவர்கள்

இன்று இயற்கை எய்தினார்..! இது 

இந்தியாவிற்கே மிகப் 

பெரிய இழப்பு..! ஏன் 

உலகில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமே 

மிகப் பெரிய பாதிப்பு..!

அவருடைய இடத்தை யாராலும் 

ஈடு செய்ய முடியாது..!


அவரை இழந்து வாடும் , அவரது குடும்பத்தாருக்கும், அவரது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் அத்தனை நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும், எங்கள் குடும்பம் சார்பாகவும், எங்கள் நிறுவனத்தின் சார்பாகவும், எங்களது ஆழ்ந்த இரங்களையும், அனுதாபத்தையும், வருத்தத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்..,! 

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்..!


நடிகர் அஜய் தேவ்கன் : 


இந்தியாவிற்கு அவர் அளித்த பங்களிப்பை ஈடு செய்யவே முடியாது. உலகமே அவரது மறைவு செய்தி அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. பலருக்கும் இன்ஸ்பயராக இருந்த உயர்ந்த மனிதன் உயிர் நீத்து விட்டார் என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்