ஒரே ஒரு கோரிக்கையில் மட்டுமே தொழிலாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Manjula Devi
Jan 09, 2024,05:59 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வழக்கமான முறையில் பஸ்கள் ஓட்டப்பட்டு வருகின்றன. வழக்கம் போல இயங்கி வருகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.


இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் சிவசங்கர் பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தொழிலாளர்கள் முன்வைத்த 2 கோரிக்கைகள் குறித்து நாங்கள் உறுதி அளித்தோம். ஆனால் சில தொழிற்சங்கத்தினர்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அவர்கள்தான் போய் விட்டார்கள். 

அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்படாத பலவற்றையும் திமுக ஆட்சிக்காலத்தான் வழங்கினோம்.  இதுதொடர்பான நிகழ்ச்சிகளில் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினரும் கூட கலந்து கொண்டுள்ளனர். எண்ணிக்கைக்காகத்தான் 6 கோரிக்கை என்கின்றனர். ஆனால் ஒரு கோரிக்கையைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றார் அமைச்சர் சிவசங்கர்.




இதற்கிடையே, தமிழ்நாட்டில் 14,214 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 94 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 15,138 பேருந்துகளில் 14 ,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


மதுரையில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 2069 பேருந்துகளில் 39 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை. கும்பகோணத்தில் 91% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 2,978 பேருந்துகளில் 2715 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லையில் 99 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1617 பேருந்துகளில் 20 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.


சேலம் மாவட்டத்தில் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 1,101 பேருந்துகளில் 1,079 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,051 பேருந்துகளில் 1952 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை.


சென்னையில் 97 சதவீதம் பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் உள்ள 3,233 பேருந்துகளில் 3,129 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  விழுப்புரத்தில் 84 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 2052 பேருந்துகளில் 1,724 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


நீலகிரியில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி, குன்னூர், உதகை, மற்றும் கோத்தகிரி பணிமனையில் இருந்த 418 பேருந்துகளில் 335 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் உதகைக்கு வரும் பேருந்துகள் பணிமனைக்கு செல்வதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர்.


இதற்கிடையே, அரசு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், பேருந்து ஊழியர்களின் ஸ்டிரைக்குக்கு தடை விதிக்கக் கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.