தடம்புரண்ட பெட்டிகள் அகற்றம்.. செங்கல்பட்டு கடற்கரை இடையிலான ரயில் போக்குவரத்து சீரடைந்தது

Meenakshi
Dec 11, 2023,05:31 PM IST

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பாதிப்படைந்திருந்த, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.


தூத்துக்குடியில்  இருந்து சென்னை நோக்கி இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு  செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே, ரயில் வந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10த்திற்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது. 


சரக்கு ரயில்கள் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் தடம்புரண்டதால் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இடையிலான ரயில்கள்  சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.




இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இடையான மின்சார ரயில் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. அத்துடன் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதன் விளைவாக தற்போது தடம் புரண்ட பெட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. தண்டவாளமும் சரி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான ரயில் போக்குவரத்து சீராகியுள்ளது. வழக்கம் போல ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.