கவரப்பேட்டை ரயில் விபத்து.. 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மீட்புப் பணிகள் 18 ரயில்கள் ரத்து
திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாகமதி எக்ஸ்ப்ரஸ் மோதி விபத்திற்குள்ளான இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. 12 மணி நேரத்திற்கும் மேலாக இது நீடிக்கிறது. விபத்தைத் தொடர்ந்து இந்தப் பகுதி வழியாக இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த 18 ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளுவர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நேற்று இரவு எட்டரை மணி வாக்கில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாகமதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மோதி விபத்திற்கு உள்ளானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. மாறாக 19 பேர் படுகாயமடைந்தனர்.
மொத்தமாக 10 பெட்டிகள் தடம் புரண்டு நிலைகுலைந்தன. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து தேசிய மீட்பு படையினர், மாநில மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், உள்ளிட்ட பலரும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் பெட்டிக்குள் சிக்கி காயம் அடைந்த 19 பேர் தற்போது பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 1800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு சென்னை சென்ட்ரல் ரயில் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று விபத்திற்குள்ளான பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அவ்வழியாக செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட 18 ரயில்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, திருப்பதி- புதுச்சேரி, சென்னை சென்ட்ரல்- திருப்பதி, சூலூர் பேட்டை-நெல்லூர், கடப்பா-அரக்கோணம், விஜயவாடா- சென்னை சென்ட்ரல், அரக்கோணம்- திருப்பதி, டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி - நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் - 12641, சென்னை சென்ட்ரல் - லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் - 16093, சென்னை சென்ட்ரல் - நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் - 12611, ஹவுராவுக்கு புறப்பட்ட சென்னை சென்ட்ரல் மெயில் - 12839, அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - 12655, பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் - 22644, புது டெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் - 12616, காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் - 17644 ஆகிய ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, எழும்பூரில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விரைவில் அரக்கோணம் ரேணிகுண்டா, கூடூர் வழியாக இயக்கப்படும். அதேபோல் சென்னை சென்ட்ரல்- சாப்ரா கங்கை காவிரி விரைவு ரயில் அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர், வழியாக இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-டெல்லி கிராண்ட் ட்ரிங்க் விரைவு ரயிலும், சென்னை சென்ட்ரல்- அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயிலும், அரக்கோணம் ரேணிகுண்டா கூடூர் வழியாக இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரலில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் ஹைதராபாத் விரைவு ரயில் சூலூர்பேட்டை நாயுடு பேட்டை வழியாக செல்லாது. செங்கல்பட்டு காக்கிநாடா சர்கார் துறைமுக விரைவு ரயில் கும்மிடிப்பூண்டி சூலூர் வழியாக செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் குறுக்கிட்ட மழை
மீட்புப் பணிகள் நேற்று இரவு முதல் விடாமல் தொடர்கிறது. விடிய விடிய மீட்புப் பணிகள் நடைபெற்றன. காலையிலும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காலையில் இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் மீட்புப் பணிகளை நிறுத்தி வைக்க நேரிட்டது. மழை நின்றதைத் தொடர்ந்து தற்போது தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சிக்னல் கோளாறா, சதிகாரர்களின் வேலையா என பல்வேறு கோணத்தில் ரயில்வே போலீசாருடன் உயிர்மட்ட குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நேற்று இரவு நேரம் என்பதால் சாலையில் இருக்கும் பெட்டிகளை அப்புறப்படுத்த முடியாத சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது வேகமாக பெட்டிகளை அப்புறப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. அதேபோல் தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல்களையும் சரி செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணிகள் இன்று மதியத்துக்குள் முடிவடையும் எனவும் தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்