அதிர வைத்த கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து.. இதுவரை 15 பேர் பலி.. 3 பெட்டிகள் உருக்குலைந்தன!

Meenakshi
Jun 17, 2024,06:00 PM IST
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொல்கத்தாவிற்கு சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் ருய்தாசா என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்த ரயில் மீது,  சரக்கு ரயில் மோதி விபத்துகுள்ளானது. கோரமான இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் வடக்கு மேற்கு வங்காள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன. இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து பகுதியில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

033-2350-8794, 033-238-33326 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயணிகள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில் மோதிதான் விபத்துகள் பெரிய அளவில் நடந்துள்ளன. ஆனால் சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி விபத்து நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. மிகவும் கவனக்குறைவான செயலாக இதை பலரும் விமர்சிக்கின்றனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறுகையில், இந்த விபத்து துரதிஷ்ட வசமான விபத்து. போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.