நீங்க வெளியூரா.. மதுரையை சுத்தி பார்க்கணுமா?.. வந்துருச்சுங்க.. சுற்றுலா பாஸ்போர்ட்.. வாங்க வாங்க!
மதுரை: தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மதுரை நகரை யாருடைய துணையும் இன்றி எளிதாகவும், சவுகரியமாகவும் சுற்றி பார்க்க சூப்பரான ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமல்படுத்தியுள்ளது. அதுதாங்க மதுரை சுற்றுலா பாஸ்போர்ட்.
தமிழ்நாட்டின் கலாாச்சார, பண்பாட்டு தலைநகர் என்று மதுரையைச் சொல்லலாம். அந்த அளவுக்கு ரிச்சான கலாச்சாரப் பெருமையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்டது மதுரை. அதை விட உச்சமாக இந்தியாவின் நாகரீகமே மதுரையின் கீழடியிலிருந்துதான் தொடங்கியதாகவும் சரித்திர ஆசிரியர்கள் தற்போது கூறத் தொடங்கியுள்ளனர். அந்த அளவுக்கு சிறப்பு பெற்ற நகரம் மதுரை. உலகப் புகழ் பெற்ற மதுரைக்கு ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. தமிழ்நாட்டிலேயே மதுரைக்கு தான் அதிக அளவில் வெளியூர், வெளி மாநில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மதுரையை சுற்றி பார்க்க நாள்தோறும் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும் கோவில் மாநகரமாம் மதுரை மாநகரம் என்ற பெயருக்கேற்ப ஆண்டு முழுவதும் திருவிழாக்களால் களை ட்டும்மதுரை மாநகருக்கு பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், சுற்றுலா பாஸ்போர்ட் திட்டம் முதன் முதலில் மதுரையில் தொடங்கப்பட்டு, செயல்படுத்தி வருகிறது சுற்றுலாத்துறை.
ஏன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதல் முதலில் மதுரையை தேர்வு செய்துள்ளது என்பது தெரியுமா..? அதுக்கு நிறைய காரணம் இருக்கு மக்களே.
மதுர குலுங்க குலுங்க.. நீ நையாண்டி பாட்டு பாடு.. புழுதி பறக்க பறக்க நீ ஜோரான ஆட்டம் போடு.. இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ நம்ம பேர எடுத்துச் சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற ஊருசனம் தேர இழுத்து செல்லும்.. என்ற பாடல்வரிகளுக்கு ஏற்ப மதுரை மாநகரம், சித்திரைத் திருவிழாவின் ஊரே குலுங்கும் அளவிற்கு மீனாட்சி சொக்கர் பவனி வரும் காட்சியைக் காண திரளான பக்தர்கள் ஒன்று கூடுவர். அதேபோல் மதுர மல்லியை பற்றி சொல்லவா வேண்டும். இதன் அழகும், வசீகரிக்கும் வாசனை அனைவரையும் கவர்ந்து விடும். அந்த அளவிற்கு மதுரை சித்திரை திருவிழாவும் மதுரை மல்லிகையும் மிகவும் பிரபலமானது.
அது மட்டுமா.. திருமலை நாயக்கர் மஹால், அழகர்கோவில், பழமுதிர்ச்சோலை, சமணப் படுக்கை, கீழக்குயில்குடி, தெப்பக்குளம், சென்மேரிஸ் சர்ச், ஊடலழகர் பெருமாள் கோவில், நரசிங்க பெருமாள் கோவில் போன்ற மிகப் பழமையான கோயில்கள் உள்ளன. இது தவிர மதுரையின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, கரகாட்டம், மிகவும் பிரசித்தி பெற்றது.
மதுரையில் பிரசித்தி பெற்ற திருவிழா மட்டும்தானாய.. சிறந்த உணவுகள் ஒன்றும் இல்லையா அப்படி தானே கேக்குறீங்க.. அட ஏங்க நீங்க வேற.. வகை வகை சாப்பிட்டு பழக்கப்பட்டு நாக்கு மதுரைக்காரங்க நாக்கு.. அதெல்லாம் பெரிய்ய லிஸ்ட்டே இருக்கு.. வாங்க அதையும் பாருங்க.. மதுரை கறி தோசை, ஜில் ஜில் ஜிகர்தண்டா, இட்லி, மட்டன்சுக்கா, மதுரை பன் புரோட்டா, கொத்துப் பராட்டோ (சால்னாவுடன் சேர்த்து அடிச்சீங்கன்னு வைங்க.. வயிறுக்கு அப்படி சுகமா இருக்கும்), அம்மா மெஸ் நண்டு ஆம்லெட், என பல பல ஐட்டங்கள் இருக்கு.
சாப்பிட்டு சும்மா படுத்துக் கிடக்க முடியுமா என்ன.. அப்படியே ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கவும் ஏகப்பட்ட இடத்தை வச்சிருக்காங்க..
அதுல அரிட்டாபட்டி, சாத்தையார் டேம், பத்து தூண்கள், ஏழு கடல் தெரு, உலக தமிழ்ச் சங்கம், காந்தி மியூசியம், அழகர்கோவில் மலை, திருப்பரங்குன்றம் மலை அப்படின்னு பல பகுதிகளும் உள்ளன.
சரி மதுரையில் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள், உணவுகள், பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்வுகள் வரலாறுகள், இவை எல்லாம் இருக்குன்னு சொல்லிட்டீங்க. இதை எப்படி சுத்தி பார்க்கலாம். அதுக்குத்தாங்க இந்த சுற்றுலா பாஸ்போர்ட்.. இந்த பாஸ்போர்ட்டால என்ன பயன்.. அப்படித்தானே கேக்குறீங்க..?
மதுரையில் உள்ள பாரம்பரிய கோயில்களுக்கு எப்படி போகலாம்..எந்த நேரத்தில், எப்போது போகலாம்?.. எந்த மாதத்தில் என்ன மாதிரியான திருவிழாக்கள் நடைபெறும்..அதன் வரலாறு என்ன.. அதேபோல் மதுரையில் எந்த உணவகம் பிரபலமானது.. அதிலும் எந்த உணவு மிகவும் பிரபலமானது.. மதுரையில் என்னென்ன பொருட்கள் எங்கு கிடைக்கும்.. என்பது போன்ற அத்தனை டீட்டெய்லும்இந்த சுற்றுலா பாஸ்போர்ட்டில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக எந்த சுற்றுலா இடத்திற்கு அருகில் என்ன ஹோட்டல் ஸ்பாட் உள்ளது என்பது போன்ற விபரங்களையும் அதற்கான போன் நம்பருடன் துல்லியமாக தெள்ளத் தெளிவாக தயாரிச்சு இருக்காங்க.
சூப்பர்ல!
சரி இதை எப்படி வாங்கனும் அப்படின்னுதான கேக்குறீங்க.. மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், மதுரை ரயில்வே ஜங்ஷன், மதுரை விமான நிலையம் .. அப்படின்னு மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலா பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்ளலாம். முழுக்க முழுக்க ஃப்ரீ பாஸு.. காசு கொடுக்க வேணாம். இது மட்டும் இல்லைங்க இந்த சுற்றுலா பாஸ்போர்ட்ல கடைசி பேஜ்ல. மதுரையவே காட்டியிருக்காங்க. அது எப்படிங்க மதுரையவே முழுசா காட்டுவாங்க.. அட மினி மேப்பை வச்சிருக்காங்கன்னு சொல்ல வந்தோம்ண்ணே! தூங்கா நகரமாம் மதுரையை அப்படியே மேப்பா சுருக்கி, சுருக்குன்னு நமக்கு புரியும் கோர்த்து வைச்சிருக்காங்க.
சரி இதெல்லாம் விடுங்க மதுரையின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சத்தை சொல்றோம்.. அதையும் போட்டு வச்சுக்கங்க காதுல.. அது என்னன்னா மதுரையை ஏன் தூங்கா நகரம் என்று சொல்கிறார்கள் தெரியுமா. மதுரையில் எத்தனை மணிக்கு வந்தாலும் வயிற்று பசியோடு யாரும் போகக் கூடாது என 24 மணி நேரமும் ஒரு சில ஹோட்டல்கள் இயங்கும். அதுலயும் தற்போது கீழமாரட் வீதியில் இயங்கும் ஜனனி மெஸ்ஸில் 24 ஹவர்ஸும் சுட சுட புரோட்டா கிடைக்கும். அந்த காலத்தில் வணிகர்கள் வியாபார நிமர்த்தமாக மதுரைக்கு இரவு நேரங்களில் வந்தாலும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வர். இதனாலதான் மதுரையை தூங்கா நகரம்னு சொல்றாங்க.
அப்புறம் என்ன டிக்கெட் போட்டு சட்டுப்புட்டுன்னு மதுரைக்கு கிளம்பலாம்ல!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்