டன் கணக்கில் கொட்டப்பட்ட புளியோதரை.. "எல்லாமே வேஸ்ட்".. மதுரை அதிமுக மாநாட்டில் பகீர்!

Su.tha Arivalagan
Aug 21, 2023,03:55 PM IST

மதுரை:  மதுரை அதிமுக மாநாட்டில் பங்கேற்றோருக்காக தயாரிக்கப்பட்ட புளியோதரை சரியாக வேகாமல் அரைவேக்காட்டில் இருந்ததால் யாரும் அதை சாப்பிடவில்லை. இதனால் வீணாகிப் போன புளியோதரையை டன் கணக்கில் வீணடித்துள்ளனர்.

வீணடிக்கப்பட்ட அந்த புளியோதரை மாநாடு நடந்த இடத்தில்  மலை போல கொட்டப்பட்டுக் கிடந்த காட்சி பார்ப்போரை பகீரென அதிர்ச்சி அடைய வைத்தது. பாளம் பாளமாக கொட்டிக் கிடந்த அந்த புளியோதரையைப் பார்த்தாலே, அரிசி சரியாக வேகாமல் இருந்தது தெரிய வந்தது.



மதுரை வளையங்குளம் பகுதியில் நேற்று அதிமுக  சார்பில் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்களுக்காக விதம் விதமாக சாப்பாடு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதில் ஒன்றுதான் புளியோதரை.

ஆனால் இந்த புளியோதரை சரியாக அரிசி வேகாமல் அரை வேக்காட்டில் இருந்ததால் பலரும் சாப்பிடாமல் கீழே கொட்டினர். சாப்பாடு சரியில்லை என்று தகவல் பரவியதால் யாரும் புளியோதரை பக்கமே வரவில்லை. இதனால் டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட புளியோதரை அப்படியே வீணாகிப் போனது. அந்தப் புளியோதரையை இன்று காலை மாநாட்டு வளாகத்திலேயே சமையல்காரர்கள் கொட்டிப் பரப்பி விட்டனர். மலை போல குவிந்த கிடந்த ��ுளியோதரையைப் பார்த்தாலே பகீர் என்றது. அரிசி வேகவே இல்லை. இதை சாப்பிட்டிருந்தால் வயிறு நிச��சயம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

4 டன் வரை புளியோதரை மீந்து போனதாக  பணியாளர்கள் கூறுகின்றனர். மாநாட்டு திடலில் தரமற்ற உணவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது  வேதனை அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் மாநாடு நடைபெற்ற இடத்தில் தூய்மை பணியாளர்கள் யாரும் பணிமர்த்தப்படவில்லை. இதன் விளைவாக இங்கு சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை எழுந்துள்ளது. சாப்பிடவே வழியில்லாமல் பலரும் இருக்கும் இக்காலத்தில், இப்படி டன் கணக்கில் உணவை வீணடித்திருக்கிறார்களே என்று பலரும் வேதனையுடன் புலம்புகின்றனர். 

விமான நிலையத்திற்கு அருகில் உணவுகளை இப்படி கொட்டக் கூடாது என்று விதிமுறை உள்ளது. காரணம், பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து விடும். அது விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உணவுக் கழிவுகளைக் கொட்டக் கூடாது. அதையும் மீறி டன் கணக்கில் உணவு கழிவுகளை கொட்டி சென்றதால் அதிமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


https://youtu.be/Hi5pe2CECCQ