International Women's day: பெண்களுக்குத் துணை நிற்க.. ஆண்கள் உறுதி எடுக்க வேண்டும்!
- தேவி
ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினமாக மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. 1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. அந்நாளில் இருந்து மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.
எதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது?
எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழும். ஏன் இந்த தினம் மட்டும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது, கவனிப்புக்குள்ளாகிறது என்ற கேள்வி எழுவது இயல்புதான். நம் சமூகத்தில், ஆண் சமுதாயம் எல்லாவற்றையும் தானே எடுத்துக் கொண்ட சமூகம்.. பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொன்றையும் அவர்கள் போராடித்தான், வாதாடித்தான் பெற்றுள்ளனர். பெண்களுக்கு, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அவர்களின் உரிமைகளுக்கும் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களின் சாதனைகளை பெருமைப்படுத்துவதற்காகவும் தான் இந்த மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்ற மகாகவி பாரதியின் வரிகளை இந்த இடத்தில் நினைவு கூறலாம். அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு கல்வி என்பது எட்டாத கனியாக இருந்து வந்தது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு கல்வி எதுக்கு என்று ஒரு சமூகம் பெண்களை தாழ்த்தி வந்து கொண்டிருந்தது. அப்படி இருந்த காலகட்டத்தில் தனது அறிவு திறமையால் சமூகத்தை மாற்றியமைத்த வரலாறு படைத்தவர்கள் பெண்கள்.
இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் சாதிக்காத துறைகளே என்று ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வானில் பறக்கும் ஆகாய விமானத்திலிருந்து கடலில் தவழும் கப்பல் வரை பெண்கள் பணியாற்றாத இடம் என்று ஒன்றுமே கிடையாது. இந்திய ராணுவப்படையில் படைத் தலைவிகளாகவும் இயற்கை உரங்கள் தயாரிக்கும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் இறைவியாகவும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர்களாகவும் இரவு நேரங்களிலும் தனது நாட்டை பாதுகாக்கும் காவல்துறை பணியாளர்களாகவும் தனது நலனையும் சிந்திக்காமல் மற்றவர்களின் உடல் நலனை முன்னேற்றம் செய்யும் மருத்துவராகவும் தனது வீட்டை மட்டும் அல்லாமல் மற்றவர்களின் வீட்டையும் சுத்தம் செய்யும் துப்புரவராகவும் பெண்கள் இப்படி அனைத்து துறையிலும் தனது அங்கீகாரத்தை பதித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஒரு பெண் என்பவள் நமது சமூகத்தின், கலாச்சாரத்தின் ஆணிவேராக இருக்கின்றாள். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் குணத்தை வைத்து அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த முடியும். பெண் என்பவள் குடும்பம் என்னும் கட்டிடத்தின் தூணாக தாங்கி அவளுடைய சந்ததினரை வழி நடத்துகின்றாள். ஒரு ஆண் உடல் ரீதியாக வலிமையானவர் என்றாலும், ஒரு பெண்ணின் மன உறுதி ஆணின் வலிமையை விட மிகுதி என்பது நிதர்சனமான உண்மை. ஒரு பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் மூலதனமாக இருந்து, ஒரு ஆணின் பிறப்பிற்கும் ஒரு பெண் தேவைப்படுகின்றாள். ஒரு ஆணின் வாழ்க்கைக்கு ஒரு பெண் தேவைப்படுகின்றாள்.
ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் முக்கியத்துவம் பெருகிக்கொண்டே போகின்றது. கல்வியில் ஆரம்பித்து தொழில்துறை முதலிய அனைத்து துறைகளிலும் பெண்களே இன்று முதன்மையாக திகழ்கின்றார்கள். பெண்கள் எப்பொழுதும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் பெண்கள் முதலிடத்தில் இருப்பது இன்றும் பெருமைக்குரிய விஷயமாக தான் இருக்கின்றது.
கல்வியைத் தவிர மற்ற துறைகளிலும் சாதிக்கும் பெண்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். படிப்பு இல்லை என்றாலும் சுயத்தொழில் செய்து அதில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. கணவனின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பெண்கள் இன்று குறைந்து விட்டனர். சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காக்கும் பெண்கள் பெருகி விட்டனர். குடிப் பழக்கத்திற்கு அடிமையான கணவனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு இன்று சுய தொழிலாதன் கை கொடுக்கிறது.. அதுதான் குடும்பத்தையும் காக்கிறது.
ஆணாதிக்க சமுதாயம்தான் இன்றும் கூட நமது சமூகத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறித்தான் பெண்கள் இன்று சாதித்துக் கொண்டுள்ளனர், வாழ்ந்து வருகின்றனர். இன்னும் இன்னும் அவர்களுக்கு வலிமை கிடைக்க இந்த மகளிர் தினத்தில் பெண்களோடு சேர்ந்து ஆண்களும் அவர்களைக் கொண்டாடுவோம்.. இந்த ஒரு நாள் மட்டுமல்லாமல், எப்போதும் பெண்களுக்குத் துணை நின்று அவர்கள் முன்னேற வழிவிடுவோம் என்று ஆண்களும் உறுதி ஏற்போம்.