மீண்டும் உச்சம் தொடும் தக்காளி விலை.. சட்னி அரைக்கிறதா வேண்டாமா.. குழப்பத்தில் மக்கள்!

Aadmika
Jul 21, 2024,05:10 PM IST

சென்னை : நாடு முழுவதும் மீண்டும் தக்காளியின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. கிலோ ரூ.100 தாண்டி போய் கொண்டிருப்பதால் நடுத்தர மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் அத்தியாவசிய காய்கறிகளில் ஒன்றாக உள்ள தக்காளியின் விண்ணை தொடும் அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை ஏற்னவே கிலோ ரூ.100 ஐ தாண்டி விட்டது. இன்னும் சில நகரங்களில் ரூ.73 முதல் ரூ.75 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. தக்காளியின் இந்த கடுமையான விலை ஏற்றத்தில் நாடு முழுவதிலும் நிலவி வரும் காலநிலையே காரணமாக சொல்லப்படுகிறது.


நாட்டின் பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதே சமயம் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட காலநிலை காரணமாக சப்ளையர்கள் விளைந்த தக்காளிகளை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது தான் தற்போது தக்காளியின் விலை ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.




கடும் வெயிலை தொடர்ந்து கனமழை பெய்து வருவதே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. தக்காளி மட்டுமல்ல வெங்காயம், உருளைக்கிழங்கு என மக்கள் தினசரி உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலைகள் கண்ணைக் கட்டும் அளவிற்கு ஏறி கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.50 க்கு குறைவாக எந்த காய்கறியும் கிடையாது. இருப்பதிலேயே மிக அதிகமாக விற்கப்படுவது சீசனே இல்லாத காய்கறியான காலிபிளவர் தான். கிலோ ரூ.139 வரை விற்கப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் தினசரி உணவிற்காக மட்டும் மிக அதிகமான தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


ஏதாவது ஒரு காய்கறியின் விலை அதிகமாக இருந்தால் அதற்கு மாற்றான உணவை தேர்வு செய்யலாம். ஆனால் அனைத்து காய்கறிகளுமே இப்படி தாறுமாறாக விற்றால் என்ன தான் செய்வது என்றே தெரியவில்லை என சிலர் புலம்புகிறார்கள். இன்னும் சிலரோ, அசைவம் உடலுக்கு கெடுதல், ஆடி மாதம் விரதம் என சைவத்திற்கு மாறி ஆரோக்கியமாக உடலை பார்த்துக் கொள்ளலாம் என்றால், காய்கறி விலையை கேட்கும் போது, இதற்கு அசைவமே சாப்பிட்டு விட்டு போகலாம் என தோன்றுகிறது. காய்கறிகளுடன் ஒப்பிடுகையில் அசைவத்தின் விலை குறைவாகவே உள்ளது என இன்னும் சிலர் ஆதங்கப்படுகிறார்கள்.