"எப்படி இருந்துச்சு.. இப்படி ஆயிருச்சே".. விவசாயிகளை அழ வைக்கும்.. தக்காளி!
தர்மபுரி: தர்மபுரியில் தக்காளி விலை அடியோடு வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்பு தக்காளி இருந்த இருப்பே வேற.. தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. 200 ரூபாய் வரைக்கும் விலை எகிறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி சட்னியே இல்லாத நிலை உருவானது. மீம்ஸ்கள் கொடி கட்டிப் பறந்தன. பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஜூஜிபி ஆனது.
அந்த விலை ஏற்றம் படிப்படியாக குறைய தொடங்கி தற்பொழுது கிலோ 30 ரூபாய், 25 ரூபாய், 20 ரூபாய் என்று குறைந்து இன்னும் அடி ஆழத்துக்குப் போய் விட்டது தக்காளி விலை. ரூபாய் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் வரத்து அதிகரித்ததன் காரணத்தினாலேயே விலை குறைய தொடக்கியது. இதனால் விவசாயிகள் உரிய விலை கிடைக்காததினால் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரியில், சில்லறைக்கு வாங்கும் தங்காளி விலை இப்படியிருக்க, சந்தைகளில் கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை என்ற நிலைக்கு சரிந்து விட்டது. இதுவே விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கும் போது தக்காளியின் விலை ரூ.3 முதல் ரூ.5 வரையாக மட்டுமே இருக்கிறது. இந்த விலை வீழ்ச்சியால் தருமபுரி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் தக்காளி விலையேற்றத்தால் ஒரே நாளில் விவசாயி ஒருவர் ரூ.38 லட்சம் வருமானம் ஈட்டி லட்சாதிபதி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்த மட்டில் தங்காளி விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. தங்காளி விலை உயர்ந்தால் பொதுமக்கள் கண்கலங்குவர். விலை குறைந்தால் விவசாயிகள் கண்கலங்குவர். ஆக மொத்தம் "தக்காளியார்" அனைவரையும் கலங்க வைத்து விடுகிறார்.