திண்டுக்கல் மார்க்கெட்டில்.. தக்காளி விலை அதிரடி குறைவு.. கிலோவுக்கு ரூ. 25 குறைந்தது..!

Manjula Devi
Jul 08, 2024,04:31 PM IST

திண்டுக்கல்:   அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூபாய் 25 ஆக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


பெரும்பாலும் மழைக் காலங்களில் தக்காளியின் விலை அதிகமாகவே காணப்படும். ஏனெனில் மழை நேரத்தில் வரத்து குறைவதால் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும். இதனால் பல வீடுகளிலும் தக்காளி சட்னி இருக்காது. தக்காளி சட்னி இல்லாமல், வாய்க்கு ருசியாகவே சாப்பிட முடியலையே என பலரும் ஏக்கமாக கூறுவது உண்டு. ஆனால் இந்த நிலை தற்போது மாறி சந்தைகளில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. 




திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில வாரமாக மழை பெய்து வந்தது. இதனால் வத்தலகுண்டு சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் அன்றாட பொருட்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இந்த நிலையில் தற்போது  உள்ளூரிலிருந்து தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ளது.  இதுதவிர ஆந்திர மாநிலத்திலும் இருந்தும் அதிக அளவு தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால்  உள்ளூர் சந்தைகளில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை அதிரடியாக குறைந்து தற்போது ஒரு கிலோ தக்காளி விலை 25 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் 27 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 350 முதல் 450 வரை விற்பனையாகிறது.


சந்திகளில் வரத்து அதிகரித்து தக்காளியின் விலை கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.