தமிழ்நாட்டு டோல்கேட்களில்.. ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டண உயர்வு.. விலைவாசி அதிகரிக்கும் என அச்சம்..!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் சுங்க கட்டணம் உயர்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.
அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்க சாவடிகளில் மட்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள வானரகம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும் புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வகை வாகனங்களை பொறுத்து ரூபாய் ஐந்து முதல் 25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதக்குடி சுங்கச்சாவடியில் இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சுங்க கட்டணம் உயர்வு எதிரொலியால் விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.