தேர்தல் முடிந்த கையோடு.. நாடு முழுவதும்.. இன்று நள்ளிரவு முதல்.. சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்!

Manjula Devi
Jun 01, 2024,05:06 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் இன்று முடிவடையும் நிலையில் சூட்டோடு சூடாக, தமிழகம் முழுவதும் உள்ள 54 சுங்கச் சாவடிகளில் 10 முதல் 20 வரையிலான கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 


நாடு முழுவதும் 800க்கும்  மேற்பட்ட சுங்க சாவடிகள் அமைந்துள்ளன. இதில் 600 சுங்க சாவடிகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகமாக 54 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. மேலும் ஒவ்வொரு வருடமும் சுங்க சாவடிகளின் கட்டணத்தை ஐந்து முதல் பத்து சதவீதம் உயர்த்தி வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அந்த வரிசையில் இந்த வருடமும் கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் 5 முதல் 10 சதவீதம் வரை சுங்க கட்டணத்தை உயர்த்தப் போவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. 




அதன்படி நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்காக  5 முதல் 20 வரை பயண கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் மாதாந்திர கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்ந்துள்ளது. 


சென்னை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பரனூர், வானரகம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர், ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. இது தவிர சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், மதுரை, கோவை போன்ற பிற மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வால் வணிகர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வருகின்றனர் .இந்த நிலையில் தற்போது சுங்கச்சாவடி கட்டணமும்  உயர்ந்து மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளது.