World Sign Language day.. சைகை மொழியோட முக்கியத்துவம் தெரியுமா உங்களுக்கு?

Meena
Sep 23, 2023,05:45 PM IST

- மீனா


"மொழி" படத்தில் ஜோதிகா பேசுவாரே.. அது என்ன தெரியுமா.. அதுதாங்க சைகை மொழி.


உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று சைகை மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சைகை மொழி என்றால் என்ன?




சைகை மொழி என்பது பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படும் மொழி ஆகும்.   மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி இந்த சைகை மொழிதான்.  வாய்மொழிக்கு முன்னோடி இந்த சைகை மொழி தான். ஆதிமனிதன் தொடக்கத்தில் வாய் மொழியை கண்டறிவதற்கு முன்பு இந்த சைகை மொழியை தான் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தி வந்தான்.


இந்த சைகை மொழி இப்பொழுது காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்கள் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் கைகளின் மூலம் மற்றும் முகபாவனையும்  காட்டி சைகை செய்து மற்றவர்களுக்கு புரிய வைக்க பயன்படுத்திகிறார்கள். உலக காதுகேளாதோர் கூட்டமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காது கேளாதோர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 80 % மக்கள் வளரும் நாடுகளில் இருக்கிறார்கள்.


கைகளை ஆட்டும் செயல் கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், காது கேளாதோர் ,வாய் பேச இயலாதவர்கள் தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கும் இந்த சைகை மொழி பேசப்படுகிறது. உலகில் பல மொழிகள் இருப்பது போலவே சைகை மொழியிலும் பல வகைகள் உள்ளன. இந்திய சைகை மொழி அமெரிக்க சைகை மொழி மற்றும் பிரிட்டிஷ் சைகை மொழி என்று பல சைகை மொழிகள் உள்ளன. எனினும் உலகளாவிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளின் போது மக்கள் பயன்படுத்தும் ஒரு சர்வதேச சைகை மொழியும் உள்ளது. 




இந்த சைகை மொழி உலகெங்கிலும் உள்ள சிறப்பு திறன்களை கொண்ட மக்களை இணைக்க உதவுவதால் இது மிகவும் முக்கியமானது. இந்திய செய்கை மொழியின் மூலம் இந்திய மாநிலங்களில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களின் தேவைகளை எளிமையாக வெளிப்படுத்த முடிகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ,இந்த சைகை மொழி எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களின்  வாழ்வின் முன்னேற்றத்திற்கு துணை புரியும் என்பது  இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது . ஆனால் சைகை மொழி பற்றி இந்தியாவில் பொதுவாக விழிப்புணர்வு இல்லை. பல பெற்றோர்களால் தன் காது கேளாத குழந்தைகளோடு எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. பெரும்பாலும் காது கேளாத குழந்தைகளை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் அல்லது  புறக்கணிக்கிறார்கள். 


இந்த பிரச்சனையை தீர்க்க சைகை மொழி தெரிந்த நபர்களிடம் கற்றுக் கொள்வதால் காதுகேளாத குழந்தைகளுடன் மற்றும் பெரியவர்களுடனும் தொடர்பு கொள்வது எளிமையாக இருக்கும்.  மேலும் அவர்கள் கூற வருவதையும் நம்மால் எளிமையாக புரிந்து கொள்ளவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இதற்கென்று தனியாக பயிற்சி எடுத்த ஆசிரியர்கள் இப்பொழுது அதிகமாக இருக்கிறார்கள். ஆகையால் அவர்களை குறைகள் உள்ளவர்கள் என்று புறக்கணிக்காமல் அவர்கள் உலகத்தில் அவர்கள் மொழியையும் நாமும் கற்று அவர்களுடன் தோழமையோடும் என்றும் இருந்து, அவர்கள் வாழ்வில் முன்னேற ஒரு எடுத்துக்காட்டாக எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துவதாக அமைந்தால்  நல்லது.