இந்த உலகம் அழகானது.. நம்மோடு விலங்குகளும் இணைந்து வாழும்போது!

Meena
Oct 04, 2023,02:35 PM IST

- மீனா


சென்னை: "இவன்தாங்க ப்ரூனோ.. எங்க வீட்டு காவல்காரன்.. காவல்காரன் மட்டும் இல்லீங்க.. பாசக்காரனும் கூட.. வீட்டு வாசல்ல தெரியாதவங்க யாராச்சும் வந்துட்டா போதும்.. விட மாட்டான்.. அவங்க அந்த இடத்தை விட்டு நகர்ந்து போறவரைக்கும் கத்திக் களேபரம் பண்ணிருவான்"


எல்லோருடைய வீட்டிலும் இப்படி ஒரு கெட்டிக்கார பாசக்கார காவலன், துணைவன் இருப்பான்.. இதில் ப்ரூனோ என்பது நாய் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாய்களுக்கும், மனிதர்களுக்குமான பந்தம் மிக மிக அழகானது மட்டுமல்ல.. இன்றைய காலகட்டத்தில் அவசியமானதும் கூட.




ஆமா.. என்ன இன்னிக்கு நாயைப் பத்திப் பேசறேன்னு பார்க்கறீங்களா.. இன்று உலக விலங்குகள் தினம்.. அப்ப நம்ம வீட்டு காவக்காரனைப் பத்தி பேசத்தானே செய்யணும். சரி, உலக விலங்குகள் தினம் எப்படி வந்துச்சு தெரியுமா.. வாங்க சொல்றேன்.


இத்தாலி நாட்டை சேர்ந்த விலங்கியல் ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரது நினைவு  நாளையொட்டி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 4ம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இயற்கையை மனிதன் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதின் விளைவாக விலங்குகளின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதோடு பல விலங்குகள் அழிந்து போகும் நிலையும் ஏற்படுகிறது. அவற்றை பாதுகாப்பதே விலங்குகள் தினத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். 




பண்டைய காலத்தில் மனிதர்கள் விலங்குகளை கட்டுப்படுத்தி தன் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டான். மாபெரும் சரித்திர  சான்றுகள் உள்ள கட்டிடக்கலை பிற வேலைகளுக்கும் யானை போன்ற விலங்கு விலங்குகளின் உதவியின் மூலம்  சாத்தியமாக்கப்பட்டது. இப்படி விலங்குகளோடு பிணைக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து மனிதன் தன் வாழ்க்கை பாதையை மாற்றியதன் விளைவு விலங்குகளின் அழிவுக்கு காரணம் ஆகின என்று விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனுக்கு விலங்குகளின் தேவைகள் குறைந்து விட்டாலும் விலங்குகள் இன்றி மனிதனால் பூமியில் வாழ முடியாது என்பது கசப்பான உண்மை.  நம் இந்திய காடுகளில் மட்டும்தான் யானை, சிங்கம், புலி இவை மூன்றும் ஒரே இடத்தில் வசிக்கின்றன. மற்ற நாடுகளில் இவை மூன்றும் ஒரு சேர  இல்லாமல் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மட்டும்தான் காணப்படும். இது நம் இந்தியாவுக்கு கிடைத்த பெருமைகளில் ஒன்று. முந்தைய நாட்களில் யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகளை வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடக்கும். அப்படி நடக்கும் போது இந்த மாதிரி அரிய வகை விலங்குகளை நம்மால் அருகில் இருந்து பார்த்து சந்தோஷப்பட முடிந்தது


டிவி, செல்போன் போன்றவற்றில் நம் நேரத்தை செலவிடுவதால் சர்க்கஸும் அழிந்து வருவதாலும் இது போன்ற சூழ்நிலையை நம்மால் அனுபவிக்க முடியவில்லை. இன்றைய நாகரீக உலகில் வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய், பூனை போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறார்கள், விலங்குகளோடு மனிதர்களின் உறவு என்பது அன்பால்  பிணைக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அவசரமான வாழ்வியல் சூழ்நிலை, வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க நம் செல்ல பிராணிகள் நமக்கு ஒரு மருந்து போல தான். மேலும் நன்றி விசுவாசம் போன்றவற்றிற்கு உதாரணமாக நாய்களை தான் நாம் எப்பொழுதும் குறிப்பிடுவோம். ஏனென்றால் தன் எஜமானின் வீட்டை பாதுகாப்பதில் நம் செல்லப்பிராணியான  நாய்க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. 


அந்நியர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டுமென்றால் முதலில் நம் செல்லப் பிராணியை தாண்டி தான் நம்மை சந்திக்க அவர்களால் முடியும். அந்த அளவிற்கு அந்த வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் தன்னை வளர்க்கும் அவர்களுக்கு மிகவும் நன்றி விசுவாசத்தோடு நாய்கள் இருப்பதினால் இவ்வாறு அவற்றை அழைக்கின்றோம். இப்படியாக நாம் வளர்க்கும் செல்ல பிராணியான நாய் தன் எஜமான் மேல் காட்டும் அன்பு ,விசுவாசம் மனிதனை பிரமிக்க வைக்கிறது. இது மட்டுமல்லாது வீட்டில் வளர்க்கப்படும் பசு மாடுகளின் மூலம் கிடைக்கும் பால்  எத்தனையோ குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக கொடுக்கப்படுகிறது.




பூமியில் இப்படிப்பட்ட விலங்குகளையும் நாம் முறையாக வளர்க்க வேண்டும். பூமியில் நிகழும் எந்த ஒரு நல்ல, தீய மாற்றத்திற்கும் மனிதனாகிய நாம் தான் காரணம். ஏனென்றால் அதிகப்படியான உணவுகள் வீணாக்கப்படுவதின் விளைவாக இன்று தெருக்களின் நாய்கள் பெருக்கம் அதிகரித்து உள்ளது என்று ஆய்வு சொல்கிறது. அது மட்டுமல்லாமல் வீட்டில் வளர்க்கப்படும் பசு மாட்டை கூட நன்றாக கவனிக்காமல் அவற்றை அதில் உரிமையாளர்கள் வீதியில் திரிய விடுவதினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவற்றினால் தாக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக சிறுமி தன் தாயுடன் பள்ளி முடிந்து வரும் போது வீதியில் திரிந்த மாடுகளில் ஒரு மாடு அந்த குழந்தையை தாக்கிய வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியது. 


பொதுவாக விலங்குகள் மனிதர்களை விட கேட்கும், உணரும் திறன் பெற்றவைகள். இவற்றோடு நாமும் இணைந்து அவற்றின் வாழ்வில் எந்த ஒரு இயல்பையும் மாற்றாமல் இருந்தால் அவைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. அதற்கு முழு பொறுப்பும் அதன்  உரிமையாளர்களுக்கே உண்டு. அதற்கு மாறாக அதன் இயல்பை மாற்ற நினைத்தால் அது மனிதனுக்கே பேராபத்தாக தான் முடியும். இந்த பூமி மனிதன் மட்டும் வாழ்வதற்காக அல்ல. மனிதனோடு சேர்ந்து மற்ற உயிரினங்களும் வாழவும் அதிலும் விலங்குகள் மனிதனோடு வாழும் போது தான் மனிதனுடைய வாழ்வு முழுமை அடைகிறது.