Vijayadasami: வித்யாரம்பம் என்றால் என்ன? 2024 விஜயதசமியில் வித்யாரம்பரம் செய்ய நல்ல நேரம் இது தான்!

Aadmika
Oct 12, 2024,09:55 AM IST

சென்னை : நவராத்திரி பண்டிகையின் நிறைவாக வரும் பத்தாவது நாளான தசமியை, விஜயதசமியாக கொண்டாடுகிறோம். துர்கா தேவி, மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷனாகிய அசுரனை வதம் செய்து, வெற்றி பெற்ற நாளே விஜயதசமியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகை தசரா என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். அதாவசு ஸ்ரீராமனுக்கும், ராவணனுக்கு நடைபெற்ற போரின் பத்தாவது நாளான தசமி திதி அன்று ராவணனை, ஸ்ரீராமன் வதம் செய்ததாகவும், அந்த வெற்றியை கொண்டாடும் தினமே தசரா என்றும் சொல்லப்படுகிறது.


தசரா பண்டிகையானது கர்பாலா மற்றும் டாண்டியா எனப்படும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதே சமயம் தமிழகத்தில் தாங்கள் செய்யும் தொழில்களில் மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்பதற்காக பெரிய நிறுவனத்தில் துர்கை அம்மனை வழிபடுவார்கள். இது வெற்றியை தரும் நாள் என்பதால் புதிய தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றை இந்த நாளில் துவங்குவார்கள். 




குழந்தைகள் கல்வியில் வெற்றி பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக விஜயதசமி நாளில் பலரும் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது உண்டு. முதன் முறையாக கல்வி பயில துவங்கும் குழந்தைகளுக்கு, வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது தந்தையின் மடியில் அமர வைத்து ஒரு தட்டில் நெல் அல்லது அரிசியை பரப்பி வைத்து, அதில் முதல் எழுத்துக்களை எழுத வைப்பார்கள். இந்த நிகழ்விற்கு வித்யாரம்பம் என்று பெயர். வித்யா என்றால் கல்வி, ஆரம்பம் என்றால் புதிய துவக்கம். புதிதாக கல்வியை துவங்கும் நிகழ்வு என்பது இதற்கு பொருள்.


இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இது பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும், புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் இணைந்து வரும் நாளில் வருகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வதற்கும், நிறுவனங்களில் வழிபாடுகள் செய்வதற்கும் நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


வித்யாரம்பம், விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரம் :


காலை 06.30 முதல் 08.30 வரை

காலை 10.35 முதல் 01.20 வரை

மாலை 6 மணிக்கு மேல்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்