வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
- ஸ்வர்ணலட்சுமி
ஏப்ரல் -3 2025 வியாழக்கிழமை பங்குனி 20 ஆம் தேதி வளர்பிறை சஷ்டி விரதம். வியாழக்கிழமையில் சஷ்டி திதி வந்திருப்பது மிகவும் சிறப்பான நாள்.
சஷ்டி திதி நேரம் :ஏப்ரல் -2 11 :50 pm முதல் ஏப்ரல் -3 9: 41 pm வரை.
சஷ்டி திதி நேரம்: ஏப்ரல்-2 ஆம் தேதி 11: 50 pm முதல் ஏப்ரல் -3 ஆம் தேதி 9: 41 pm வரை உள்ளது.
சஷ்டி என்பது முருகப்பெருமானை மனதார வழிபடும் நாள். "சுப்பிரமணியர்" , "கந்தசாமி " "சண்முகம்" "கார்த்திகேயர்" "குமாரசுவாமி "மற்றும் "குமரன் " பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார் சிவபெருமான்- பார்வதியின் மகன் முருகப்பெருமான்.
முருகப்பெருமான் தேவர்களின் படையின் தளபதி ஆவார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் முருகப்பெருமான் முதன்மையாக வழிபடப்படுகிறார். முருகனின் அறுபடை வீடு கோவில்கள் தமிழ்நாட்டிலேயே அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
சஷ்டி விரதம் : விரதம் என்பது அன்றைய நாள் முழுதும் பக்தர்கள் முழுமையாக விரதம் இருப்பது அல்லது பகுதியாக பால்பழம் அருந்தி விரதம் இருந்து வழிபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றனர்.
சஷ்டி விரதம் சூரிய உதய நேரம் தொடங்கி மறுநாள் சூரிய கடவுளுக்கு பிரார்த்தனை செய்த பிறகு முடிவடைகிறது .பாரம்பரிய இந்து நாட்காட்டியின் ஒவ்வொரு சந்திர மாதத்தின் ஆறாவது நாளிலும் அதாவது சுக்ல பக்ஷம் (சந்திரனின் வளர்பிறை கட்டம்) மற்றும் கிருஷ்ணபக்ஷம் சந்திரனின் (தேய்பிறை கட்டம்) ஆகியவற்றில் சஷ்டி அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் இரண்டு சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
சஷ்டி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?
பொதுவாக திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுபவர்கள், வறுமையில் பண பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள், தொழிலில் மேன்மேலும் வளர்ச்சி அடைய விரும்புபவர்கள், நோய் குணமாக நினைப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், கல்வி மேன்மை வேண்டுபவர்கள், உயர் பதவி வேண்டுபவர்கள், சொந்த வீடு, பூமி வேண்டும் என நினைப்பவர்கள், என அவரவர் வேண்டுதல்களுக்கு இணங்க சஷ்டி விரதம் இருக்கலாம்.
தேய்பிறை சஷ்டியில் பிரச்சனைகள் தேய வேண்டும் என்று விரதம் மேற்கொள்ளப்படும். வளர்பிறை சஷ்டியில் நல்ல விஷயம் துவங்கி அதில் மேன்மேலும் உயர வேண்டும், வளர வேண்டும் என நினைப்பவர்கள் விரதம் கடைப்பிடித்து வழிபாடு செய்வார்கள்.
விரதம் இருப்பவர்கள் இப்பொழுது கோடைகாலம் ஆதலால் நிறைய தண்ணீர் குடிக்கவும். பால், பழங்கள், பழ ஜூஸ் வகைகள் நிறைய எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது சாலச் சிறந்தது.
அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானிடம் தங்கள் பிரச்சினையை போக்கி நல்வழி காட்டு "முருகா" என மனமுருகி வேண்டுதல் வைத்து சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். வீட்டில் வேல் வைத்து கும்பிடுபவர்கள் அல்லது முருகப்பெருமான் படம் அல்லது உருவச்சிலை வைத்து வழிபாடு செய்பவர்கள் செவ்வரளி மலர் வைத்து அலங்காரம் செய்து பால் ,நாட்டு சர்க்கரை ,பழங்கள் நைவேத்தியமாக வைத்து வெற்றிலை தீபம் ஏற்றி, ஷட்கோண கோலமிட்டு முருகனை வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. கோலத்தில் ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது மிக்க நல்லது. சகல சம்பத்துகளும் நன்மைகளும் வெற்றியும் தந்து அருள்வார் முருகப்பெருமான்.
சஷ்டி விரதத்தன்று கந்த சஷ்டி கவசம் படிப்பது சாலச் சிறந்தது. சஷ்டியில் முருகனை வழிபட்டு அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்வோமாக. மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.