ரத்தத்தின் ரத்தமே.. என்னங்க புரியலையா.. அட ஆமாங்க.. இன்னிக்கு உடன்பிறப்புகள் தினம்தான்!

Su.tha Arivalagan
Apr 10, 2024,05:54 PM IST

- சந்தனகுமாரி


ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே.. எங்க பார்த்தாலும் ஸ்ட்டேஸ்களில் இதுதான்.. ஏன்னு சொல்லுங்க.. அட, கரெக்டுங்க.. இன்னைக்கு உடன்பிறப்புகள் தினம். 


ஆமாங்க ஏப்ரல் 10 உலக உடன்பிறப்புகள் தினம். அதுக்குன்னு தொப்புள் கொடி உறவுகள் தான் கொண்டாடனும் அப்படி எல்லாம் இல்ல. உடன்பிறவாத சகோதர, சகோதரிகளுடனும் நாம் உடன் பிறப்புகள் தினம் கொண்டாடலாம். தாய் , தந்தையருக்கு பிறகு நம்மை கண்ணும் கருத்துமாக கடைசிவரை வழி நடத்துபவர்கள் நம் உடன் பிறந்தவர்கள் தான். நமக்குள் ஆயிரம் சண்டை சச்சரவு வந்தாலும் அடுத்தவர்களிடம் நம்மை விட்டுக் கொடுக்காமல் பெருமையாக பேசுவது நம் உடன் பிறந்தவர்களே. 


அமெரிக்காவில் மான்ஹட்டனை சேர்ந்த கிளவுடா எவர்ட் என்பவர் தனது பாசத்துக்குரிய உடன்பிறப்புகளான அலன் மற்றும் லிசெட்டே ஆகியோரை வெவ்வேறு விபத்துகளில் இழந்துவிட்டார். அந்த துக்கம் தாளாமல் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அனைவரும் உடன்பிறப்புகளுடன் பாசமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் 1995 ஆம் ஆண்டு உடன் பிறப்புகள் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிருவி அதில் கிளவுடா பல சேவைகளை செய்தார். அமெரிக்காவின் மாகாண ஆளுநர்கள் , அதிபர்கள் இதை வரவேற்று ஆண்டுதோறும் ஏப்ரல் பத்தாம் தேதி உலக உடன்பிறப்புகள் தினம் கொண்டாட ஆரம்பித்தனர்.




இதெல்லாம் பாரீன் மேட்டருங்க.. நம்ம ஊர்லயெல்லாம், நம்ம வீடுகள்ள எல்லாம் வேற லெவலில் நம்ம உடன்பிறப்புகள் இருப்பார்கள்.. இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. இருந்தாலும், நம்ம உடன் பிறந்தவர்களுடன் நடந்த சுவாரசியமான நினைவுகள் சிலவற்றைப் பார்ப்போம்.


- நாம ஏதாவது தப்பு பண்ணினால் நம்மள பஸ்ட் போட்டு கொடுத்துட்டு ஒண்ணுமே தெரியாதது போல நம்ம கூடவே இருப்பாங்க அது தாங்க உடன்பிறப்பு.


- காசு, பணத்துக்கு சண்டை வருதோ என்னவோ டிவி ரிமோட்டுக்கு வரும் பாருங்க ஒரு சண்டை அதை வார்த்தையால சொல்ல கூட முடியாது. பேட்டரி ஒரு பக்கமும், கவர் மறுபக்கமும் பறக்கும்.


- அக்கா,தங்கச்சி டிரஸ் எல்லாம் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கிட்டு அவ வரதுக்குள்ள டிரஸ் இருந்த இடத்துல வைக்கணும்னு நினைச்சிட்டு வருவோம். ஆனா கண்டிப்பா மாட்டிக்குவோம். அப்ப வரும் பாருங்க ஒரு சண்டை.. ஆத்தாடி.. ஆனாலும் ரொம்ப சுவாரசியமா இருக்கும்.


- ஸ்கூல்ல நம்ம அடி வாங்குவதை பார்த்துட்டு நம்மை வீட்டில் வந்து போட்டு கொடுக்கிற ஒரே ஜீவன் நம்ம கூட பிறந்தவங்களா தான் இருக்கும்.


ஆனா இப்பல்லாம் உடன்பிறந்தவங்க அப்படி இல்லைங்க, நிறைய மாறிட்டாங்க.. பல இடங்கள்ள சொத்துக்காக என்ன வேணாலும் செய்யும் உடன் பிறப்புகள் அதிகரிச்சுட்டாங்க. உடன்பிறந்தவர்களிடம் அன்பை வலுப்படுத்துவோம், போட்டி, பொறாமையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இருக்கிற நாட்களை சந்தோசமாக வாழ கற்றுக் கொள்வோம். கருவறை முதல் கல்லறை வரை தொடரும் உறவு உடன்பிறந்தோர்  உறவு மட்டும் தான்.. அதை புனிதமாக்க வேண்டியது நமது கையில்தான் இருக்கு.