நெசவாளர்களை கௌரவிக்கும் ஒரு தினம்.. இந்தியா முழுவதும் இன்று.. தேசிய கைத்தறி தினம் கொண்டாட்டம்!

Manjula Devi
Aug 07, 2024,02:25 PM IST

சென்னை:   கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. 


நம் நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு ஏழாம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தில் உள்நாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக கைத்தறி நெசவாளர்கள் ஊக்குவிக்கப்பட்டது. சுதேசி இயக்கம் என்பது வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய ஜவுளித்துறைக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஆகும்.இந்த சுதேசி இயக்கத்தின் நினைவாக தான், இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 தேதி முதல் தேசிய கைத்தறி தினமாக அறிவித்திருந்தது.




அதன்படி இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி பத்தாவது ஆண்டு  தேசிய கைத்தறி தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் நாட்டின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் நிறுவனமாக நெசவாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தவே இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கைத்தறி தொழில்களில் சேலம், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன. இந்தத் துறையில் 70% பெண்கள் இருப்பதால் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த துறை நேரடி தொடர்பை கொண்டுள்ளது. 2023- 24 நிதியாண்டில் உலக சந்தை மதிப்பில் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் பத்தாவது தேசிய கைத்தறி தினம் இன்று டெல்லியில் உள்ள விக்யான்பவனில் கொண்டாடப்படுகிறது. இதில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் மத்திய ஜவுளித்துறை வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் கைத்தறி துறையில் முக்கிய பங்கு வகித்த நெசவாளர்களை கௌரவிக்கும் பொருட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு சந்த் கபீர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.  இவ்விழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தில்  நிலைத்தன்மை என்ற புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.