மாசி மகம்.. 12 நதிகளில் நீராடி மாசி மகத்தைக் கொண்டாடும் இந்திய மக்கள்!

Swarnalakshmi
Mar 12, 2025,11:16 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாசி மகம்: 12. 3. 2025 புதன்கிழமை மாசி மாதம் 28ஆம் தேதி மாசி மகம் கொண்டாடப்படுகிறது.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் மிக மிகச் சிறந்தது ஆகும். இந்தியாவில் இருக்கும் 12 நதிகளில் நீராடி மாசி மகத்தை கொண்டாடுவார்கள்.


தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில்  அமைந்துள்ள கும்பேஸ்வரர் கோவிலில் நீராடி மக்கள் அனைவரும் மாசி மகத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் மட்டுமன்றி தமிழ் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பிரபலம் ஆனது இந்த மாசி மகம். தோஷம் நீக்கும் புண்ணிய  நாளாக மாசிமகம் கருதப்படுகிறது.


ஆறு, கடல், குளங்களில் நீராடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாசி மகத்தன்று வழிபடும் தெய்வங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை ஆறு ,குளம் ,கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூஜைகள் சடங்கு போன்றவை நடைபெறும். இந்த கோலாகலமான நிகழ்வை காண பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவது வழக்கம்.


மாசி மகம் தூய்மைப்படுத்தும் சடங்குடன் தொடர்புடைய பண்டிகை ஆகும். புண்ணிய நதிகளில் நீராடுவது மக்கள் தங்கள் ஏழு பிறவி பாவங்களில் இருந்து விடுபட கொண்டாடப்படுகிறது.


மகம் நட்சத்திரம் நேரம்: 12 ஆம் தேதி அதிகாலை 3:53 முதல் 13ஆம் தேதி 5 :09 வரை. மாசி மகத்தன்று புனித நதியான கங்கை- கடல், குளம் , ஆறு  போன்ற நீர்நிலைகளுடன் கலக்கிறது என்று கூறப்படுகிறது .27 நட்சத்திரங்களில் ஒன்று மகம் நட்சத்திரம். 13ஆம் தேதி வரும் பௌர்ணமியும் மிகவும் விசேஷம். இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிட்டும் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் பல கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். தான தர்மங்கள் செய்ய பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.


மாசி மகம் சிறப்புகள்:




* வருண பகவான் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்தது மாசி மகத்தன்று.

* மாசி மக நாளன்று தான் அம்பிகை வலம்புரி சங்காக கிடந்து, தாட்சாயினியாக உருவெடுத்தால் என்கிறது புராணக்கதை.

* மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். அதன் பெயர் அப்பர் தெப்பம் என்பதாகும்.

* மாசி கயிறு பாசி படியும் என்பது பழமொழி பெண்கள் திருமாங்கல்ய சரடு மாற்றிக் கொள்வது இந்த மாதத்தில் அதீத சிறப்பு வாய்ந்ததாகும். பெண்கள் காரடையான் நோன்பு இருந்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பு.

* மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்ற கூற்று உண்டு.

* மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சாலச் சிறந்தது. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசி மகத்தில் தான்.


மாசி மகம் வழிபாடு எவ்வாறு? கடைப்பிடிக்கலாம்:


* மாசிமகம் நாள் அன்று புனித நீராட முடியாதவர்கள் அதனைப் பற்றிய புராணம் படிப்பதும் கேட்பதும் புண்ணியமே.

* அன்னதானம் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான். ஏனெனில், போதும் என்ற மனம் அன்னதானம் கொடுக்கும் போதும் பெரும் போதும் மட்டுமே தோன்றும்.

* ராமேஸ்வரம், கும்பகோணம் பகுதிகளில்   பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.


புனித நீராடல் செய்ய இயலவில்லை எனில் சிவன் ,பார்வதி, முருகன், பெருமாள் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும். அம்பிகைக்கு குங்குமம் அர்ச்சனை செய்வது இன்பமும் வெற்றியும் தேடிவரும் .புனித நீர் நிலைகளில் நீராடி பக்தி  சிரத்தையுடன்  ,சிவ சிந்தனையுடன் சிவன் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்ய ,புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


மேலும் ஆன்மிக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.