ஆதியும் அந்தமும் இல்லாமல்.. அனைத்துமாக நிறைந்திருக்கும் சிவபெருமான்.. இன்று மகா சிவராத்திரி

Swarnalakshmi
Feb 26, 2025,10:51 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆதியும் அந்தமும் இல்லாமல் அனைத்து இடமும் அனைத்துமாக நிறைந்து இருப்பவன் சிவபெருமான் .சிவனுடைய ராத்திரி ,சிவனுடைய இன்பமான ராத்திரி, சிவமான ராத்திரி என்று பலவகை பொருளைத் தருகிறது இந்த மகா சிவராத்திரி.  இந்த சிறப்பான மகா சிவராத்திரி நாளன்று செய்ய வேண்டிய வழிபாடுகளையும், நான்கு கால பூஜைகள் மற்றும் வீட்டில் வழிபடும் முறை குறித்தும் பார்ப்போம்.


மகா சிவராத்திரியின் சிறப்புகள்:




இந்நாளில் சிவபெருமான் பார்வதி தேவி திருக்கல்யாணம் நடைபெற்றதாக ஐதீகம் .


திரு 'நீலகண்டர் '-சமுத்திர  மந்தனத்தின் போது வெளியான ஆழி விஷத்தை சிவபெருமான் தனது கந்தத்தில் அடக்கிக் கொண்டு நீலகண்டர் ஆக உலகத்தை காப்பாற்றிய நாள் இதுவாகும்.


சிவபெருமானுக்கு சூரியன் ,சந்திரன் ,அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர் . லிங்கோத் பவம் தோற்றம் இந்நாளில் நடைபெற்றது என்பது ஐதீகம்.


நான்கு கால பூஜைகள்:


மகா சிவராத்திரி அன்று கோவில்களில் நான்கு கால பூஜை என்பது மிகச் சிறப்பானதாகும் .மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை உள்ள காலகட்டம் நான்கு ஜாமம் எனப்படும்.


முதல் ஜாமம் பூஜை:


பிப்ரவரி 26 புதன்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம். இந்த நேரத்தில் பிரம்மதேவன் சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த பூஜை செய்வதால் ஜாதக ரீதியான தோஷங்கள் நீங்கி பிறவா நிலை அடைய முடியும். இந்நேரத்தில் ரிக் வேத பாராயணம் செய்து வழிபாடு நடைபெறும்.


இரண்டாம் ஜாமம் பூஜை:


மகாவிஷ்ணு சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். யஜூர் வேத பாராயணம் செய்து சிவன் வழிபாடு நடைபெறும் .இதனால் வறுமை ,கடன் தொல்லை, சந்திர தோஷம், சந்திர தசை ,சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். இரண்டாம் ஜாம அபிஷேக  நீரை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.


மூன்றாம் ஜாமம் பூஜை:


சக்தியின் வடிவான அம்பாள் மூன்றாம் கால பூஜை செய்வாள் .மகா சிவராத்திரியின் உச்சகட்ட வழிபாடு இந்த நேரம் தான். இதனை லிங்கோத்பவ காலம் என்றும் கூறுவர், இரவு 11:30 முதல் ஒரு மணி வரை பூஜையில் சிவபெருமான் மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். சாம வேத பாராயணம் மற்றும் சிவ சஹஸ்ரநாமம் உச்சரிக்க வேண்டும் .சகல பாவங்கள் நீங்கி எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.


நான்காம் ஜாமம் பூஜை:


முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர், ரிஷிகள் ,மனிதர்கள், அனைத்து ஜீவராசிகள் இந்த நாலாம் கால பூஜை செய்து சிவபெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம் .அதர்வண வேத பாராயணம் செய்து சிவ வழிபாடு நடைபெறும்.


நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறம் ஆகும். நல்ல வேலை, உயர் பதவி, புகழ் ,பட்டம் ,பதக்கம், தொழில் மேன்மை, அவரவர் வேண்டுதலுக்கு தக்க சிவபெருமான் அருள் கிடைக்கும்.


வீட்டில் வழிபடும் முறை:


மகா சிவராத்திரி அன்று காலை எழுந்ததும் 'ஓம் நமசிவாய 'என்னும் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி எழவும் .வீட்டை சுத்தம் செய்து ,குளித்து, நல்ல சுத்தமான எளிய பருத்தி ஆடை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசி பூஜை அறையில் சிவலிங்கம் வைத்து வழிபடும் வழக்கம் இருப்பவர் அதற்கு அபிஷேகம் செய்யலாம். அபிஷேகப் பிரியனான சிவனுக்கு செம்பருத்தி பூ மல்லி, முல்லை ,வில்வம் வைத்து  வழிபட வேண்டும்.


நைவேத்தியமாக பழங்கள், பால்  நாட்டு  சர்க்கரை, வெற்றிலை ,பாக்கு, வாழைப்பழம், பாசிப்பருப்பு பாயாசம் ,கற்கண்டு பொங்கல் அவரவர்க்கு இயன்றவாறு நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.


சிவராத்திரி அன்று இரவு ஒரு மணி வரையாவது கண் விழித்து வழிபடவும். கோவிலில் நான்கு மணிக்கு கால பூஜைகள் நிறைவு பெற்ற பின்னரே பிரசாதம் சாப்பிட வேண்டும். அவரவர் உடல்நிலைக்கு தகுந்தவாறு விரதம் இருந்து சிவபெருமான் வழிபாடு செய்யலாம்.


சிவபுராணம் ,திருவாசகம், லிங்காஷ்டகம் ,1008 லிங்கம் போற்றி, பில்வாஷ்டகம் ,சிவ கவசம் சிவ ரக்ஷா ஸ்தோத்திரம், சிவ ஸ்வர்ணமாலா துதி, சிவ மானச பூஜா, போன்றவை படிக்கலாம். மௌன விரதம் மேற்கொண்டு மனதில் ஆழ்ந்த தியானம் செய்வது அதீத சிறப்பு.


ஒரு நோட்டில் ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரம் 108 அல்லது 1008 முறை எழுதலாம்.


"பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாச்சலம் மகாதேவ மகாலிங்க மத்தியார் சுனேசா "இந்த மந்திரத்தை ஆறு முறை சிவாலயத்தில் ஜபிக்க ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்த பலன் கிடைக்கும் .சிவபெருமான் நம் அனைவருக்கும் நல் வாழ்வு நல்குவார்.


ஓம் நமச்சிவாய


மேலும் ஆன்மிக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி