தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு 2024.. பெண்கள் ஏன் இந்த விரதம் இருக்க வேண்டும்?
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் வரும் மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று காரடையான் நோன்பு. மாசி மாதம் நிறைவடைந்து, பங்குனி மாதம் துவங்கும் அந்த நாளையே காரடையான் நோன்பாக கொண்டாடுகிறோம்.
திருமணமான பெண்கள், தங்கள் கணவரின் ஆயுள், ஆரோக்கியம், தொழில் ஆகியவை நீடித்து இருக்கவும், திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு வரப்போகும் கணவர் நலமுடன் இருப்பதற்காகவும் கடைபிடிக்கப்படும் நோன்பே காரடையான் நோன்பு.
எதற்காக கொண்டாடப்படுகிறது காரடையான் நோன்பு?
காரடையான் நோன்பு எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற கதை அனைவருக்குமே தெரிந்தது தான். தனது கணவரான சத்தியவானின் ஆயுட்காலம் முடிய போகிறது என்பதை தெரிந்து கொண்ட சாவித்ரி, அன்னை கெளரியை வேண்டிக் கொண்டு கடுமையான விரதம் இருக்கிறாள். காட்டில் அவளுக்கு கிடைத்த அரிசி, காராமணி ஆகியவற்றை சேர்த்து கார அடை செய்து அம்பிகைக்கு படைத்து வழிபடுகிறாள்.
அம்பிகையின் அருளால் எம தர்மன் வந்து, சத்யவானின் உயிரை எடுத்துச் செல்வது சாவித்திரியின் கண்களுக்கு தெரிகிறது. ஒரு மானிட பெண்ணால் தன்னை காண முடிகிறது என்றால் அவள் எப்படிப்பட்ட பதி விரதையாக இருக்க வேண்டும் என வியந்து, அவளை வணங்கி செல்கிறார் எமன். ஆனால் சாவித்திரியோ தனது கணவரின் உயிரை திருப்பி தருமாறு எமனிடம் கடுமையாக போராடுகிறாள்.
எமனை பின் தொடர்ந்து எமலோகத்தின் வாசல் வரை செல்கிறாள் சாவித்திரி. அவளை தடுத்து நிறுத்திய எமன், "மானிட உடலுடன் எமலோகத்தின் வாசல் வரை நீ வந்ததே எனக்கு ஆச்சரியம் தருகிறது. திரும்பி சென்று விடு. இதற்கு மேல் வருவதற்கு உனக்கு அனுமதி கிடையாது தாயே" என்கிறார். அப்போதும் தன்னுடைய கணவரின் உயிரை திரும்ப தரும் வரை தான் விட போவதில்லை என பிடிவாதமாக போராடுகிறாள் சாவித்திரி. அவளின் மன உறதி, கணவரின் மீது கொண்ட பக்தி, பாசத்தை கண்டு வியந்து எமன், உனது கணவரின் உயிரை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன். இரண்டு வரங்கள் தருகிறேன். என்ன வேண்டும் கேள் என்கிறார்.
எமனையே மடக்கிய புத்திசாலி சாவித்திரி
புத்திசாலி தனமாக எமனிடம் வரம் கேட்ட சாவித்திரி, நாங்கள் இழந்த நாடு உள்ளிட்ட அனைத்தும் திரும்ப கிடைக்க வேண்டும். என்னுடைய கணவரை தவிர வேறு ஒருவரை கண் எடுத்தும் பாராத பதிவிரதை நான். அதனால் என் கணவரின் வாரிசை பெற்றெடுக்கும் பாக்கியத்தை எனக்கு தர வேண்டும் என இரண்டு வரங்களை கேட்கிறாள்.
நீ கேட்ட இரண்டு வரங்களையும் தந்தேன் என எமதர்ம ராஜன் வாக்கு கொடுத்த பிறகு தான் சாவித்திரி கேட்ட இரண்டாவது வரத்தில் மறைந்திருக்கும் அவளது மதிநுட்பத்தையும், தன்னுடைய வாக்கு வன்மையால் தன்னை அவள் வென்று விட்டதையும் உணர்ந்தார். சாவித்திரி கேட்டபடியே அவளது கணவர் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்தார் எம தர்மர்.
சாவித்திரியின் பதிவிரதையை போற்றும் விதமாக ஆண்டுதோறும் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. சாவித்திரியை போல் இந்த நாளில் கார அடை செய்து படைத்து, விரதம் இருந்து வழிபட்டால், அம்பாள் நமக்கும் தீர்க்க சுமங்கலி வரம் தருவாள் என்பது நம்பிக்கை. காரடையான் நோன்பு இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி வியாழக்கிழமை, பங்குனி 01ம் தேதி வருகிறது. அன்று காலை 06.35 முதல் பகல் 12.48 வரையிலான நேரம் நோன்பு இருப்பதற்கான நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
காமாட்சி அம்மன் விளக்கேற்றி வழிபடுங்கள்
இந்த நேரத்தில் வீட்டில் உள்ள காமாட்சி அம்மனின் படத்தின் முன் விளக்கேற்றி வைத்து, ஒரு இலை போட்டு, அதில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, முடிந்தவர்கள் ரவிக்கை துணி வைக்க வேண்டும். அதோடு பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய மஞ்சள் சரட்டில் சிறிது பூ சுற்றி வைக்க வேண்டும். சிறிது நூலில் மஞ்சள் நனைத்து நோன்பு கயிறு தயாரித்து அதிலும் சிறிது பூ சுற்றி வைக்க வேண்டும்.
கார அடை, வெள்ளை அடை ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து, அதோடு உருக்கிய வெண்ணெய் சிறிதளவு வைத்து, அம்பாளுக்குரிய மந்திரங்களை சொல்லி கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு 12.46 மணியளவில் மஞ்சள் சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் மாற்றிக் கொள்ளலாம்.
காரடையான் நோன்பு தமிழ் மந்திரம் :
உருகாத வெண்ணெயும்
ஓரடையும் நான் தருவேன்
ஒருகாலும் என் கணவர்
எனை விட்டு நீங்காத அருள்தருவாய்
இந்த மந்திரத்தை சொல்லி காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.