சந்தோஷம் காணாத நாள் உண்டா.. இன்று உலக மகிழ்ச்சி தினம்.. ஹேப்பியா இருங்க மக்களே!
எல்லாத்துக்கும் இப்போ ஒரு தினம் வந்தாச்சு.. அந்த வகையில் இன்று "உலக சர்வதேச மகிழ்ச்சி தினம்".. இதுக்குமாய்யா தினம் வச்சு கொண்டாடனும்.. என்று நீங்க கேட்பது புரிகிறது மக்களே..!
உண்மைதான்.. ஆனால் இப்படித்தான் ஆகி விட்டது இன்று. மகிழ்ச்சி என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. மகிழ்ச்சியை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் இன்று மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலே குறைந்து போய் விட்டது. இந்தநிலையில்தான் உலக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை பொதுக்குழு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது.
அதன்படி, மகிழ்ச்சி என்பது மனிதருக்கு அடிப்படை உரிமை. இது இன்றைய காலத்தில் தேவையான ஒன்று. மனிதர்களின் மன அழுத்திலிருந்து விடுபட்டு நேர்மையாக சிந்திக்க உதவுகிறது. தான் மட்டும் மகிழ்ச்சியடையாமல் நம்மை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியடைய உதவி செய்கிறது. எனவே உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று ஐநா முடிவு செய்தது.
2012, ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் நோக்கம் என்னவென்றால் உலக மகிழ்ச்சி இயக்கத்தை ஊக்குவித்தல், அணி திரட்டுதல் மற்றும் முன்னேற்றம் அடைய செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டதாகும்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கெல்லாம் காரணமே தேவையில்லை.. மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் நினைவாற்றல் சிறப்பாகிறது.. மனதில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கிறது.. மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கும்.. புதிய விஷயங்களைச் செய்ய எனர்ஜி கிடைக்கிறது. நாலு நல்லதை செய்யும் தெம்பு கிடைக்கும். நெகட்டிவிட்டி குறையும்.
பள்ளி நிறுவனங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வைப் பற்றி கற்பிப்பதற்கான வாய்ப்பாக இந்த தினத்தைப் பயன்படுத்தலாம். ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்தில் நேர்மறை சிந்தன, நினைவாற்றல் மற்றும் நன்றியுணர்வை ஊக்குவிக்க பாடங்கள் மற்றும் செயல்பாடுகளாக இதை இணைக்க அறிவுறுத்துகிறது ஐ.நா சபை. சில நாடுகள் இந்த நாளை பொது விடுமுறை நாளாக அங்கீகரித்துள்ளன. உதாரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை அலுவல் ரீதியான விடுமுறையாக அறிவித்துள்ளது.
மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கும் , மகிழ்ச்சியடைவதற்கும் வேலையிலிருந்து ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளனர். இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு நிஜமான சந்தோஷத்தைத் தரும் காரணிகள் குறைந்து விட்டன. பலர் சமூக வலைதளங்கள் மூலம் மகிழ்ச்சி அடைகின்றனர். சினிமா மகிழ்ச்சி தருகிறது.. இசை, பாடல் மகிழ்ச்சி தருகிறது. இப்படி பல வழிகள் உள்ளன.
மகிழ்ச்சியாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது? மனிதர்களை மன அழுத்ததிலிருந்து விடுபட வைக்க மகிழ்ச்சி முக்கியம். சிலர் தனக்கு பிடித்த பாடல் கேட்பதிலும், பாடுவதையும் செய்கின்றனர். இன்னும் சிலர் விளையாட்டு, ஓவியம், புத்தகங்கள் வாசிப்பு என மனதிற்கு பிடித்த நிகழ்வுகளை செய்வர். நோக்கம்.. சந்தோஷமாக இருக்க வேண்டும்.. மன அழுத்தம் குறைந்து மனசு லேசாக வேண்டும், அவ்வளவுதான்.
காரணமே பார்க்காதீங்க.. சந்தோஷமாக இருக்க முயலுங்க.. எந்த நேரமும் சந்தோஷமாக இருக்க முடியுமா என்றால் முடியாது.. ஆனால் முடிந்த வரை சந்தோஷமாக இருக்கப் பாருங்க.. அது உங்களையும் நல்லா வச்சுக்கும், உங்களுடன் இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.. மகிழ்வித்து மகிழ் என்று சும்மாவா சொன்னார்கள்.. ஸோ, இந்த நாளில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்ற உறுதியை எடுத்துக்கங்க.. ஹேப்பியா இருங்க.
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கட்டும். அன்பு நிறையட்டும். அனைருக்கும் மகிழ்ச்சி பரவட்டும். சர்வதேச மகிழ்ச்சி தின வாழ்த்துகள்!
கட்டுரை: சுஜித்ரா