உலக காடுகள் தினம்: வன வளம் அழிந்தால் ... மனித குலமும் சேர்ந்து அழியும்!
- பொன் லட்சுமி
இன்று உலக காடுகள் தினம்.. வன வளத்தைப் பாதுகாக்கவும், வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஐ.நா. சபையால் கொண்டு வரப்பட்டுதுதான் இந்த உலக காடுகள் தினம்.
ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது. காடுகள் என்பது வெறும் மரக் கூட்டங்கள் மட்டுமல்ல.. அது உயிர்களின் மூலாதாரமாக பார்க்கப்பட வேண்டும். வனங்கள்தான் ஆக்சிஜன் உற்பத்தியில் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. வறட்சியைப் போக்க உதவுகின்றன.. நீர் வளத்தைப் பெருக்க வழி ஏற்படுத்துகின்றன.
காடுகள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது அடர்ந்த மரங்கள், பசுமை நிறைந்த செடி கொடிகள், மிருகங்கள், பூத்துக் குலுங்கும் மலர்கள் இவை எல்லாம் தான் மனதில் வரும். உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள்தான். அதனால்தான் இந்த பூமி நிம்மதிப் பெருமூச்சு விட முடிகிறது. விலங்குகள், பறவைகள், பூச்சி இனங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள்போன்ற பல் ஆயிரக்கானக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அத்தனையும் மனித குலத்தின் ஆரோக்கியான வாழ்க்கையுடன் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன.
காடுகள் மனிதனுக்கு தேவையான பல அத்தியாவசியமான பொருள்களை வழங்குகின்றது... ஆக்சிஜன் தவிர்த்து, நீராதாராம், வீடு கட்டுவதற்கு தேவையான மரங்கள், காகிதங்கள் செய்வதற்கு தேவையான மூலப் பொருள்கள், உணவுக்குத் தேவையான பழங்கள் காய்கறிகள், மூலிகை பொருள்கள் போன்றவற்றை வழங்குகிறது.
ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக காடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. அழிந்து கொண்டு வருகிறது என்பதைவிட அழிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. மனிதன் தன்னுடைய சுய தேவைக்காக காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறான்.. கூடவே அவனும் சேர்ந்து மெல்ல மெல்ல தனது அழிவுக்கும் குழி தோண்டிக் கொண்டிருக்கிறான். மனித இனம் மட்டுமல்லாது விலங்குகள் பறவைகள் போன்ற பிற உயிரினங்களும் காடுகளின் உதவியால் தான் சுவாசிக்கவே முடிகிறது.
விலங்குகளின் உறைவிடமாக திகழ்வது காடுகளே. விலங்குகள் வாழ்வதற்கு காடுகள் மிகவும் அவசியமாகும்.. காடுகள் அழிக்கப்படுவதால் மனிதனை விட விலங்குகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.. காடுகள் அழியும் போது அங்குள்ள விலங்குகள் உணவுக்காகவும், நீருக்காகவும் தவிக்கின்றன. உணவு தேடி நீர் தேடி நிலப் பகுதிக்குள் நுழைகின்றன. இதனால்தான் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கிறது.
காடுகள் தான் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. . மற்றும் வானிலை காலநிலை மாற்றங்களை ஒழுங்கு படுத்துகின்றன. காடுகள் இருப்பதால் தான் பூமியின் வெப்பம் தணிக்கப்படுகிறது. மழை பெய்கிறது. மழைக்காலங்களில் ஏற்படும் மண்ணரிப்பும் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.. அந்தந்த காலத்தில் மழை பெய்யாவிடில் வறட்சி, பஞ்சம், பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு தானியங்கள் நிலையாமை என பல தீமைகள் விளையும். ஏற்கனவே இதையெல்லாம் பல நாடுகள் சந்திக்க ஆரம்பித்து விட்டன.
தென் ஆப்பிரிக்காவில் வறட்சி தாண்டவமாடுகிறது. ஏன் நம்ம பெங்களூரில் கூட வறட்சியின் கோரப் பிடியை மக்கள் சந்தித்து விட்டதை நாம் பார்த்தோம். இதெல்லாம் டீசர்தான்.. பூமிப் பந்து முழுவதும் மிகப் பெரிய தண்ணீர்ப் பற்றாக்குறை, வறட்சி வெறித்தனமாக தாண்டவமாடும் என்று விஞ்ஞானிகள், கால நிலை சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சுற்றுச்சூழலைக் காக்காவிட்டால் நமது கதி அதோ கதிதான் என்று எச்சரித்தபடிதான் உள்ளனர்.
இது தவிர காடுகள் மூலிகைகளின் பொக்கிஷங்கள் ஆகும்.. சித்த மருத்துவத்தில் பயன்படும் அனைத்து மூலிகைகளையும் தருவது காடுகளே.. காடுகளில் இருந்து நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.. சிலர் காடுகளின் நன்மைகளை அறியாமல் காடுகளை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதால் பயனுள்ள மரங்களும் பொருட்களும் கிடைக்காமல் போவது மட்டுமல்லாது நாம் வாழும் பூமியின் தட்பவெப்ப நிலையும் அபாயகரமாக மாறி வருகின்றது... இதனால் பாதிக்கப்படுவது மனித இனம் மட்டுமல்லாது காட்டில் வாழும் உயிரினங்களும் தான்...
இயற்கை நமக்கு அளித்த அற்புதமான படைப்புதான் காடுகள்.. இதன் பயனை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.. இன்றைய உலகில் மரங்களை அழித்ததனால் போதிய மழை பெய்யாமல் குடி தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இதுவே தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தால் பின்னாளில் வரும் நமது சந்ததிகள் குடிநீர் மட்டுமல்ல சுவாசிக்கும் காற்றையும் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.
இப்பவே பல இடங்களில் சுத்தமான காற்றை கியாஸ்க்குகள் அமைத்து விற்க ஆரம்பித்து விட்டனர். நாளை இது நிரந்தரமாக மாறி விடும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.. நமது காடுகளின் இதயம் தொடர்ந்து நொறுங்கிக் கொண்டிருப்பதால்.
அந்த அவல நிலை மாற வேண்டுமெனில் நாம் ஒவ்வொருவரும் இன்றே ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு இயற்கையை பாதுகாப்பேன்.. வீட்டிற்கு ஒரு மரம் கண்டிப்பாக நடுவேன். காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நாம் யாவருக்கும் உண்டு. ஒரு மரத்தை வெட்டினால் இரு மரங்களை நடு என்று இன்று எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.. இதை நாமும் செயல்படுத்த வேண்டும்.. நமது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான காற்றையும் பரிசளிப்போம். நமது வாழ்க்கைக்கு தேவையான நல்ல காற்றையும் மழையையும் உணவையும் தந்து மனிதர்களை வாழ வைக்கும் காடுகளை பாதுகாத்து அதற்கு நன்றியை செலுத்துவோம்.
என்னங்க கிளம்புங்க ஒரு மரக் கன்றை வாங்குங்க.. வீட்டுக்கு வெளியிலோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்திலோ நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி வளர்க்கப் பாருங்க.. அது வளர்ந்து வந்து நிழல் கொடுக்கும்போது உங்க மனசுல ஏற்படும் உணர்வு இருக்கே.. ஆஹா.. அதை அனுபவிச்சாதான் தெரியும்.