உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!
- கோவை சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்
கருவை விதைத்தவன் தந்தை - எனினும்
கருவில் சுமப்பவள் தாய் - நம்மை
கருத்தாய் வளர்ப்பவள் தாய் - சிறந்த
கருணைத் தெய்வம் தாய் - பேசக்
கற்றுத் தருபவள் தாய் .
தாலாட்டில் துவங்கி இம்மொழி
தாயின் வழி வந்ததால் -அதனைத்
தாய்மொழி என்றழைத்தோம் -அதற்கு
தனிச்சிறப்பளித்தோம்.
தாய்மண் என்பதுவம் ,
தாய்நாடென்பதுவும் ,
தாய் மொழி என்பதுவும் - அந்தத்
தாய்க்குரிய பெருமையன்றோ.
மற்ற மொழிகள் பலவும்
மனம் விரும்பிக் கற்றாலும்
தாய்மொழிப் பண்டிதமே
தரணியில் உயர்வு தரும்.
ஏனைய மொழிகள் எல்லாம்
சுவை சேர்க்கும் பதார்த்தம் போல்,
தாய்மொழிதான் நமக்கு
பசி தீர்க்கும் சோறாகும் - நம்மைத்
தாங்கிடும் வேராகும் - அறிவுக்கு
அஸ்திவாரம் போலாகும்.
தாயின் சிறந்த கோயிலும் இல்லை
தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை.
தாய்மொழியை நேசிப்போம்.
தாய்மொழியை வாசிப்போம்.
தாய்மொழியை சுவாசிப்போம்.
தாய்மொழியை வணங்கிடுவோம்.
அவரவர் மொழி வளர்ப்போம்
அடுத்தவர் மொழி மதிப்போம்.
அனைத்து மொழிகளையும்
அரவணைத்துச் செல்வோம்.
அவரவர் ஊரில் பிழைக்க
அவரவர் மொழியே போதும்.
அனைத்துலகிலும் பழக
அன்னிய மொழிகளும் வேண்டும்.
மற்ற மொழிகள் மீது - அதீத
மயக்கம் கொள்ளாமல்,
தாய்மொழி பேசுதற்கு - சிறிதும்
தயக்கம் கொள்ளாமல்
தாய் மொழி சிறப்புணர்ந்து -அதனைத்
தரணியில் பரப்பிடுவோம் - அதையோர்
தவமாய்க் கொண்டிடுவோம்.
வாழ்க தாய்மொழி.
வளர்க தாய்மொழிப் பற்று