ஊட்டிக்கு ஒரு நாள் டிரிப் பிளான் பண்றீங்களா.. இதைப் பண்ணுங்க.. டென்ஷன் இல்லாம போய்ட்டு வரலாம்!
சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்ல மக்கள் பெருமளவில் குவிந்து வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. ஏகப்பட்ட வாகனங்கள் அதிக அளவில் வருவதால்தான் போக்குவரத்து ஜாம் ஆகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒரு சூப்பரான ஏற்பாட்டை மக்களுக்காக செய்துள்ளது.
கோடை விடுமுறையை மக்கள் அனுபவித்து வருகின்றனர். கூடவே கடுமையான வெயிலும் கொளுத்தி வருவதால் மக்கள் குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதில் ஊட்டி, கொடைக்கானலுக்குத்தான் பெருமளவில் மக்கள் குவிகிறார்கள்.
கொடைக்கானலில் ஏப்ரல் தொடங்குவதற்கு முன்பிருந்தே கூட்டம் அலை மோதுகிறது. அதிலும் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் வந்தாலும் வந்தது.. குணா குகைகைக்குப் போகணும், பார்க்கணும் என்று மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வழக்கத்தை விட அதிக அளவிலான மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள். இதனால் தங்குவதற்கு இடமில்லை. போக்குவரத்தும் கடுமையான நெரிசலைக் கண்டு வருகிறது.
இதே நிலைதான் ஊட்டியிலும் காணப்படுகிறது. அங்கும் கூட்டம் அதிக அளவில் அலை மோதுகிறது. இந்த நிலையில் ஊட்டிக்குச் செல்லும் பயணிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சூப்பரான ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் கண்டு களிக்க சுற்று பேருந்து இயக்கப்படுகிறது.
மேலும், கோவை புதிய பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் பஸ்களில் ஜாலியாக பயணித்து ஊட்டியை அடையலாம். அதேபோல ஊட்டியிலிருந்தும் கோவைக்கு எளிதாக வந்து போகலாம்.
இதற்கான கட்டணமும் பெரிதாக இல்லை. சிறியவர்களுக்கு ரூ. 50 மட்டுமே. பெரியவர்களுக்கு ரூ. 100. மேலும் மத்திய பேருந்து நிலையம், தண்டர்பேர்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டி மியூசியம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களுக்கு இந்த பஸ் செல்கிறது. தேவையில்லாத போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதற்கு இந்த பஸ் பயணம் சூப்பராகவும் இருக்கும், திரில்லிங்காகவும் இருக்கும்.
ஒரே நாளில் போய் விட்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை டிரை பண்ணிப் பாருங்களேன்!