TNPSC Group 4 Exam: இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தும் தமிழ்நாடு அரசு.. பயன்படுத்திக்கங்க!

Su.tha Arivalagan
Jan 30, 2024,10:17 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது அரசு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையர் ஏ.சுந்தரவல்லி  வெளியிட்டுள்ள அறிக்கை:




வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்யூஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20,000 மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும் இப் பயிற்சி வகுப்புகளின் மூலம் அதிக அளவிலான மாணவ மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.


தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி 4 தேர்விற்கு 6244 காலியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.


இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.