பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் மேலும் பல மினி பேருந்துகளுக்கு அனுமதி.. அரசு திட்டம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், புதிய ரூட்டுகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதுதான் மினிபஸ்கள். இந்த மினி பஸ்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சென்னை மாநகரம் மற்றும் மதுரை மாநகராட்சி எல்லைப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களுக்கு மினி பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சி காலம் முடிந்த நிலையில், ஜெயலலிதா ஆட்சியில் ஸ்மால் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதுவும் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழக முழுவதும் உள்ள கிராமங்கள், சிறு ஊர்கள் போன்றவற்றில் அரசு பேருந்துகளை இயக்க முடியாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்கி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மினி பேருந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வெகு தொலைவு வரை நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் மினி பேருந்துகளை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் மினி பேருந்துகள் எந்தெந்த இடத்தில் இயங்க வேண்டும். எத்தனை கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டும் என்பது தொடர்பான தமிழ்நாடு ஒருங்கிணைந்த வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது. அதே நேரம் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும்.
அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். 18 கிலோ மீட்டர் சேவை இல்லாத வழித்தடத்திலும், 8 கிலோமீட்டர் சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் வரை பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி வேண்டும். அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்துகளை பொதுமக்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இதன் பின்னர் கருத்து கேட்பு கூட்டம் வரும் ஜூன் 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் எனவும், இதனைத் தொடர்ந்து மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.