அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

Indhumathi
Feb 05, 2025,06:09 PM IST

சென்னை: அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் நாளை உலகெங்கும் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாளான நாளை மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.


லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ளது விடாமுயற்சி. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தில் திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விடாமுயற்சி தற்போது திரைக்கு வந்து விட்டது. ஆம், நாளை படம் ரிலீஸாகிறது.




அஜீத் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் கொண்டாடக் காத்துள்ளனர். கடந்த பொங்கலுக்கே இந்தப் படம் வந்திருக்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போடப்பட்டு இன்று திரைக்கு வருகிறது. இதையடுத்து 2 நாட்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தருமாறு லைகா நிறுவனம் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இருப்பினும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சியைத் திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.


சமீப காலமாக காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து வருகிறது. அதிகாலைக் காட்சிகளுக்கு தற்போது அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி இந்தியன் 2 படம் வெளியானது. அன்று மட்டும் காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல விஜய்யின் கோட் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் இரு நாட்களுக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் செப்டம்பர் 5ம் தேதி காலை 9 மணிக் காட்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.


சூர்யாவின் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸானது. அன்றைய தினம் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2 நாள் அனுமதி கோரப்பட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி தரப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 டிசம்பர் 20ம் தேதி வெளியானது. அன்று மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  


இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியான கேம் சேஞ்சர் படத்துக்கும் அந்த நாளில் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது அஜீத்தின் விடாமுயற்சிக்கும் நாளை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்