கிளாம்பாக்கத்திலிருந்து கிளம்பும்.. பஸ்களில் கட்டணம் குறைப்பு.. எங்கு.. எவ்வளவு தெரியுமா?

Meenakshi
Jan 02, 2024,05:44 PM IST

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

  

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த சனிக்கிழமை அன்று  முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். 


புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும்.




கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 32 கிலோமீட்டர் இருப்பதால் அதற்கு ஏற்ப கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 


இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கலாம் என்றும், அவர்களது கூடுதல் கட்டணம் திரும்பித் தரப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


அதன்படி, கோயம்பேட்டிலிருந்து திருச்சிக்கு அரசு விரைவு பேருந்துகளில் ரூபாய் 460 வரை வசூலிக்கப்பட்ட நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துகளுக்கு  கட்டணமாக 430 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 20 முதல் 35 ரூபாய் வரை மிச்சமாகிறது என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.