தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு.. புதிய அட்டவணை வெளியீடு
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 04 ம் தேதி மிச்சாங் புயலாக உருவெடுத்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களையே புரட்டி போட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு வாரம் ஆகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. வெள்ளச் சேதம் ரூ.4000 கோடிக்கும் மேல் என கணக்கிடப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். பள்ளிகள் பலவற்றிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் வங்கடக்கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்தத்தால் நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்னும் 5 நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் டிசம்பர் 11 ம் தேதியான நாளை துவங்க இருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் மேலும் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். புதன்கிழமை தேர்வுகள் தொடங்கும் என்றும் புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 6 முதல் 12ம் வகுப்பு வரைக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதியில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.