அரசு ஊழியர் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போகிறார்களா.. தீயாய் பரவிய வதந்தி.. பரப்பியது யார்?

Su.tha Arivalagan
Aug 11, 2024,10:50 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக நேற்று மாலை திடீரென ஒரு செய்தி வாட்ஸ் ஆப்களில் பரவியது. ஆனால் அது வதந்தி என்று தற்போது தெரிய வந்துள்ளது.


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்தது. கொரோனா வந்ததற்குப் பிறகு இந்த ஓய்வு வயதானது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதுவே அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறையும், 60 வயது வரை அனைவராலும் திறம்பட பணியாற்ற முடியாது, பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக இது கூறப்பட்டது. இருப்பினும் இந்த உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.


60 வயது வரை ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் தற்போது அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்தக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது. வாட்ஸ் ஆப்களில் இது காட்டுத் தீ போல பரவியது. பெரும்பாலும் குரூப்களில்தான் அதிகம் இது பரப்பப்பட்டது. 




இது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது கூறுகையில், இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்தத் தீர்மானமும்  நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் தெரிவித்துள்ளது.


வதந்தி கிளப்பியது யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்