பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Manjula Devi
Jan 10, 2024,06:42 PM IST

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று (ஜனவரி 09) அறிவித்திருந்த நிலையில், இன்று (ஜனவரி 10) காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட தமிழக அரசு சார்பில் பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஜனவரி 02ஆம் தேதி அரசு ஊழியர்கள், பொது துறையில் பணிபுரிவோர் , வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், ஆகியோர் நீங்கலாக ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு 1000 ரூபாய் பொங்கல் பரிசு உடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு என அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்  என  நேற்று அறிவித்தது.




கடந்த மூன்று நாட்களாக இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அடுத்து இன்று காலை 10 மணி அளவில் அனைத்து ரேஷன் கடைகளிலும்  பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை சீதா அம்மாள் காலனியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட  தேதிகளில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை அவர்களுக்குரிய ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.