தமிழக அமைச்சரவையில் விரைவில் வருகிறது மாற்றம்.. உச்சகட்ட பரபரப்பில் திமுக
Apr 30, 2023,05:18 PM IST
சென்னை : தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திமுக.,வில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
அடுத்து அமைச்சராக போகும் வாய்ப்பு எந்த எம்எல்ஏ.,விற்கு கிடைக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
2021 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களைக் கைப்பற்றி, 46 சதவீதம் ஓட்டுக்களை பெற்று, தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது. வரும் மே 7 ம் தேதியுடன் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு துவங்க உள்ளது. இதனை சிறப்பாகக் கொண்டாட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திமுக.,வின் "ஊழல்" மற்றும் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது திமுக.,வில் பல சலசலப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. திமுக.,வின் அமைச்சரவை மாற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
முக்கிய இலாக்காக்கள் பல மாற்றப்படலாம், எம்எல்ஏ.,க்கள் சிலருக்கு அமைச்சர் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் திமுக அமைச்சர்கள் பலரும், யாருடைய இலாக்கா பறிக்கப்படுமோ என திக் திக் திக் என பதற்றத்தில் உள்ளனர்.
சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயம், பெரிய அமைச்சர்கள் யாரும் மாற்றப்பட வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது. அவர்கள் மீது கை வைத்தால் தேவையில்லாத சிக்கல்கள் வரலாம் என்பதால் லேசுபாசான அமைச்சரவை மாற்றமாக இது இருக்கலாம் என்றும் தெரிகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு இதுவரை ஒரு முறை மட்டுமே அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர் ஆவார். தற்போது மீண்டும் ஒரு மாற்றம் நடைபெறவுள்ளது.