"சிங்கிள் சீட்" கூட கிடையாது.. காங்கிரஸுக்குக் கதவை மூடிய திரினமூல் காங்கிரஸ்.. வங்கத்தில் சிக்கல்!

Su.tha Arivalagan
Feb 24, 2024,10:40 AM IST

டெல்லி: மேற்கு வங்காள மாநிலத்தில் 42 லோக்சபா  தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக திரினமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.


இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு நடந்து வருகிறது. அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், குஜராத், கோவா என்று வேகமாக நடந்து வந்த நிலையில் மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீரிலும் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை 5 சீட்கள் வரை காங்கிரஸ் கேட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் மமதா பானர்ஜி 2 சீட் தருகிறேன், இரண்டிலும் வெற்றி பெறுவதையும் உறுதி செய்கிறேன். உங்களுக்கு இங்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது.. எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று காங்கிரஸிடம் பேசியுள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த மமதா பானர்ஜி தற்போது ஒரு சீட் கூட தர முடியாது என்று கூறி விட்டாராம்.




இதுகுறித்து கட்சியின் ராஜ்யசபா எம்.பியான டெரிக் ஓ பிரையன் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் 41 தொகுதிகளிலும் திரினமூல் காங்கிரஸ் போட்டியிடும் என்று எங்களது தலைவர் கூறியுள்ளார். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல அஸ்ஸாமில் சில தொகுதிகளிலும், மேகாலயாவில் துரா லோக்சபா தொகுதியிலும் திரினாமூல் காங்கிரஸ் போட்டியிடும். இதில் மாற்றம் கிடையாது என்று கூறியுள்ளார் டெரிக் ஓ பிரையன்.


டெரிக் ஓ பிரையன் இப்படிக் கூறியிருப்பது இந்தியா கூட்டணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக தொகுதிப் பங்கீடுகள் நடந்து வந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இப்படி அதிரடியான சம்பவம் நடந்திருப்பதால் இந்தியா கூட்டணிக்குள் நிலவி வந்த உற்சாகம் சற்று குறைந்துள்ளது.


இந்தியாவிலேயே அதிக எம்.பிக்களைக் கொண்ட 3வது பெரிய மாநிலம் மேற்கு வங்காளம். இங்கும் இந்தியா கூட்டணி வெற்றிகரமான தொகுதிப் பங்கீட்டை நடத்தியிருந்தால் அது அந்தக் கூட்டணிக்கு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலும் கூட பெரிய பூஸ்ட்டாக அமைந்திருக்கும் என்பதால் இது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.


முதலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வந்த காங்கிரஸ் அதன் பிறகு 5 தொகுதிகளில் வந்து நின்றது. ஆனால் "எத்தனை பைனாகுலர் வைத்துப் பார்த்தாலும், 2 தொகுதிகளைத் தவிர வேறு எந்தத் தொகுதியும் கண்ணுக்கு எட்டவில்லை" என்று திரினமூல் காங்கிரஸ் கட்சியினர் கிண்டலாக கூறினர். இந்த நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று கூறியுள்ளது திரினமூல் காங்கிரஸ்.


இந்த தேக்க நிலையை உடைக்க சோனியா காந்தியின் உதவியை இந்தியா கூட்டணி எதிர்நோக்கியிருப்பதாக தெரிகிறது. சோனியா காந்தி நேரிலோ அல்லது தொலைபேசியிலோ மமதா பானர்ஜியுடன் பேசினால் நிலைமை மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.