திருவண்ணாமலை தீபம் 2024.. தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள்!

Su.tha Arivalagan
Dec 11, 2024,06:33 PM IST

சென்னை: திருவண்ணாமலையில் நடைபெறவள்ள மகா தீபத் திருவிழாவையொட்டி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.


திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது. வெள்ளிக்கிழமை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக ஏற்கனவே சிறப்பு பஸ்களை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.




ரயில் எண்  06115/06116 தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இது முன்பதிவு வசதி இல்லாத எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.  அதேபோல  மறு மார்க்கத்தில் இதே 13, 14 மற்றும் 15 தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.


தாம்பரம் - திருவண்ணாமலை ரயில் இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 2.245 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து இரவு 10.25 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 2.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் வழியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மவருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள்




இதேபோல திருவண்ணாமலைக்கும், விழுப்புரத்துக்கும் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இரு மார்க்கத்திலும் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் விழுப்புரத்திலிருந்து  இரவு 8 மணிக்குப் புறப்பட்டு அதே நாள் இரவு 9.20 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். 


மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.40க்கு விழுப்புரத்தை வந்தடையும். இரு மார்க்கத்திலும் இடையில் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் இந்த ரயிலானது நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காட்பாடி - விழுப்புரம் சிறப்பு ரயில்கள்




காட்பாடியிலிருந்து விழுப்புரத்திற்கும் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.


காட்பாடி மற்றும் விழுப்புரத்திலிருந்து டிசம்பர் 13, 14, 15ம் தேதிகளில் இவை இயக்கப்படும். காட்பாடியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு 10 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும் மறுமார்க்கத்தில் முற்பகல் 11.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு காட்பாடியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரு மார்க்கத்திலும் வேலூர், ஆரணி சாலை, போளூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்