என்னடா வேற மாதிரி நாறுது.. கஞ்சா என்று கூறி.. மாட்டுச் சாணியை விற்ற பலே கேடிகள்!

Meenakshi
May 03, 2024,04:13 PM IST

திருப்பூர்:  திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா என கூறி ஏமாற்றி விற்ற இருவர் மற்றும் அதனை வாங்கியவர் இருவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை பலகுடோன் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவிலரில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடந்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறியதில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இருவரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் இருவரும் உண்மையை கக்கினர்.




இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், கோவையில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா வாங்குவதற்காக வந்த லோகநாதன் மற்றும் உமா மகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கஞ்சாவிற்கு பதில் மாட்டுச் சாணம் இருந்தது தெரியவந்தது.  அதாவது மாட்டுச் சாணியை கஞ்சா என்று இவர்கள் வாங்கியுள்ளனர்.  இந்த போலி கஞ்சாவை  கிலோ ரூ. 33,000 கொடுத்து வாங்கியது தெரியவந்தது.


யாரிடமிருந்து இவர்கள் கஞ்சா வாங்கினர் என்று போலீஸார் கேட்டபோது, திருப்பூர் கேவிஆர் நகர் பகுதியில் இருந்தவந்த கவின் மற்றும் சாரதி தான் இதை தங்களிடம் கஞ்சா என கூறி விற்று சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து கவின் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். நூதன முறையில் மாட்டுச் சாணத்தை கஞ்சா எனக்கூறி விற்றதாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல கஞ்சாவை வாங்கியவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.