தீரன் பட பாணியில்.. "வெறும் ஜட்டியுடன்.. கொடூர ஆயுதங்களுடன்"..  நடுக்கத்தில் திருப்பதி!

Su.tha Arivalagan
Nov 13, 2023,05:22 PM IST

- மஞ்சுளா தேவி


திருப்பதி: திருப்பதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் "ஜட்டி கேங்ஸ்டர்" என்ற கொள்ளை கும்பல், தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி போலீஸார் எச்சரித்துள்ளனர்.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் வெளியானது. அது பல வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த பயங்கர கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.


புறநகர்களில் தனித்து காணப்படும் வீடுகளில் புகுந்து கொடூரமாக கொலை செய்து விட்டு கொள்ளையடித்து வந்த வட மாநிலக் கும்பல் குறித்த படம் அது. நிஜமாக நடந்த பவேரியா கும்பலின் கொள்ளை, கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இது உருவாக்கப்பட்டது. தற்போது அதே பாணியிலான ஒரு அபாயகரமான கும்பல் திருப்பதி பக்கம் சுற்றி வருவதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.




ஜட்டி கேங்ஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜட்டி மட்டுமே அணிந்து துணிகர கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். கையில் கூர்மையான ஆயுதங்களை வைத்துள்ளனர். திருப்பதியில் ஆள் நடமாட்டம் இல்லாத புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர் கொள்ளை நடந்து வருகிறது. இதனை அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்தத் தொடர் கொலை மற்றும் கொள்ளைக்கு காரணம் ஒரே கும்பல் தான் என்பதை கண்டறிந்தனர்.


ஜட்டி கேங்ஸ்டர் என்ற கொள்ளை கும்பல் முதலில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நோட்டமிடுகின்றனர். மக்கள் தனியாக வசிக்கும் வீடுகளில் கதவை தட்டுகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் கதவை திறக்கின்றனர்.  மின்னல் வேகத்தில் அவர்களைத் தாக்கி வீடு புகுந்து திருடி விட்டு தப்பி விடுகின்றனர்.


ஜட்டி கேங்ஸ்டர் கொள்ளையடிக்கும்  சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.  இரவு நேரங்களில் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வித்தியாசமான சத்தம் கேட்டாலோ, காலிங் பெல்  சத்தம் கேட்டாலோ யாரும் வெளியே செல்ல வேண்டாம் என திருப்பதி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




திருப்பதி மக்களுக்கு மட்டுமல்ல, நம்ம மக்களும் கூட இரவு நேரங்களில் யாராவது கதவைத் தட்டினால் உடனே திறக்கக் கூடாது. உஷாராக இருப்பது நல்லது.