திருப்பதி போறீங்களா?.. தெற்கு ரயில்வேயின் இந்த முக்கிய அறிவிப்பை பார்த்துட்டு பிளான் பண்ணுங்க!

Meenakshi
May 17, 2024,06:12 PM IST

சென்னை: சென்னை சென்டிரல் - திருப்பதி  இடையிலான சப்தகிரி மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதுவும் இது கோடை காலம் என்பதால், தொடர் விடுமுறையினை முன்னிட்டு மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பி வருகின்றனர். 


இந்நிலையில்,சென்னையில் இருந்து திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:




சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16057) வருகிற 31ம் தேதி வரை தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. 


அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் (16058) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16053) வருகிற 31ம் தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. 


அதே தேதியில், திருப்பதியில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16054) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.