தமிழ்நாட்டில்.. மீண்டும் வழித்து அள்ளப் போகும் "இந்தியா" கூட்டணி.. அதிமுகவுக்கு எத்தனை தெரியுமா?
சென்னை : லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும், எந்த கட்சிக்கு எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும், மக்களின் ஆதரவு எந்த கட்சிக்கு உள்ளது என்பது பற்றி டைம்ஸ் நவ் மற்றும் Matrize - NC இணைந்து கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன.
இதன் முடிவுகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக கருத்துக் கணிப்புகளுடன் கிளம்பி விட்டனர். இது படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.. பெரும்பாலும் பலிக்காது.. அல்லது ஏறுக்கு மாறாகத்தான் ரிசல்ட் வரும். மக்களின் மன நிலையை ஓரளவு அறிய இது உதவும் அவ்வளவுதான்.
டைம்ஸ் நவ் மாட்ரிஸ் என் சி கருத்துக் கணிப்பு
டைம்ஸ் நவ், Matrize - NC இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் மாநிலத்தின் பிரதான கட்சிகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியும், லோக்சபா தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறார்கள், எந்த கட்சிக்கு எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணிக்கு 36 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக.,விற்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக.,விற்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்குமாம்.
கடந்த 2019 தேர்தலில் தமிழ்நாட்டையே வாரி எடுத்துச் சென்றது திமுக கூட்டணி. 38 தொகுதிகளில் திமுக கூட்டணியே வென்றது. தேனியில் மட்டும் அதிமுக வென்றது. இந்த முறையும் திமுக கூட்டணியின் கையே ஓங்கியிருக்கும் என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பிலேயே 36 தொகுதிகள் என்று கூறியிருப்பதைப் பார்த்தால் அனேகமாக மொத்த தொகுதிகளையும் கூட திமுக கூட்டணியே வெல்லும் வாய்ப்பு வந்தாலும் அதை மறுப்பதற்கில்லை.
ஓட்டு சதவீதத்தை பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணிக்கு 59.7 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்குமாம். அதாவது பாதிக்கும் மேற்பட்டோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்.
பாஜக.,விற்கு 20.4 சதவீதம் ஓட்டுக்களும், அதிமுக.,விற்கு 6.3 சதவீதம் ஓட்டுக்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 21 சதவீதம் பேர் மிகவும் திருப்தி அளிப்பதாகவும், சில விஷயங்கள் திருப்தி அளிப்பதாக 27 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என 44 சதவீதம் பேரும், பதிலளிக்க விரும்பவில்லை என 8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியாக அதிமுக.,வின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 26 சதவீதம் மிகவும் திருப்தி அளிப்பதாகவும், ஓரளவு திருப்தி அளிப்பதாக 28 சதவீதம் பேரும், மிகவும் மோசம் என 42 சதவீம் பேரும், கருத்து சொல்ல விரும்பவில்லை என 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி
லோக்சபா தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தால் அது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு 28 சதவீதம் பேரும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 32 சதவீதம் பேரும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என 24 சதவீதம் பேரும், இப்போதே எதுவும் கணிக்க முடியாது என 16 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே போல் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை பாஜக.,விற்கு பலனளிக்கும் என்ற கேள்விக்கு அதிகம் பலனளிக்கும் என 26 சதவீதம் பேரும், ஓரளவிற்கு பலனளிக்கும் என 32 சதவீதம் பேரும், இப்போது எதுவும் சொல்லி விட முடியாது என 40 சதவீதம் பேரும், கருத்து சொல்ல விரும்பவில்லை என 2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.