இந்தியாவில் 3167 புலிகள்.. எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. சென்சஸ் அறிக்கை வெளியீடு!

Su.tha Arivalagan
Apr 09, 2023,03:42 PM IST
மைசூரு: இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு சென்சஸ் கணக்குப்படி இந்தியாவில் 3167 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள  புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த சென்சஸ் கணக்கின் விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி, மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் இன்று வெளியிட்டார்.

அதன்படி 2022ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3167 ஆகும். கடந்த 2006ம் ஆண்டு வெறும் 1411 புலிகளே இருந்தன. இது 2010ம் ஆண்டு 1706 ஆக அதிகரித்தது. பின்னர் 2014ம் ஆண்டு 2226, 2018ம் ஆண்டு 2967 என்று இருந்தது. தற்போது மேலும் அதிகரித்து 3167 ஆக உயர்ந்துள்ளது.




மைசூரில் இந்தியாவின் புராஜக்ட் டைகர் திட்டத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின. இதுதொடர்பாக நடந்த விழாவில்தான் மேற்கொண்ட சென்சஸ் முடிவை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் அடுத்த 25 ஆண்டுகளில் புலிகள், சிங்கங்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு தொடர்பான  கொள்கைக் குறிப்பையும் பிரதமர் வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்திற்கு வந்திருந்தார். நேற்று தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் இன்று கர்நாடகம் வந்தார். மைசூர் அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு அவர் பயணம் செய்து பார்வையிட்டார். பின்னர் தமிழ்நாட்டின் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று அங்கு ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த யானை ரகுவை சந்தித்து மகிழ்ந்தார். அந்த யானையை பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதியையும் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.