மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்.. இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன!

Manjula Devi
Jul 01, 2024,12:52 PM IST

புது டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் (ஜூலை 1)  அமலுக்கு வந்துள்ளன.


ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை நேற்று நள்ளிரவு வரை அமலில் இருந்து வந்தன. இந்த சட்டங்களுக்கு விடை கொடுத்து விட்ட புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.




இதற்குப் பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டமும், இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷிய சட்டமும், இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டத்தையும் உருவாக்கியது மத்திய அரசு. இந்த சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.


இந்த மூன்று சட்டங்களும் கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மசோத்தாக்களாக தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பப்பட்டன. அவரும் உடனடியாக ஒப்புதல் அளிக்கவே இது சட்டமானது.


இந்த சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வாயில் நுழையாத பெயர்களை சூட்டி சட்டங்களை அமல்படுத்துவதாக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வந்தனர். ஆனாலும் தற்போது இந்த சட்டங்கள் அமலுக்கு வந்து விட்டன.