திரெட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. டெஸ்க்டாப் வெர்ஷன் வருதாம்!

Su.tha Arivalagan
Aug 05, 2023,02:06 PM IST
கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லியுள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க். அதில் புதிதாக சர்ச் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளனராம். மேலும் டெஸ்க்டாப் வெர்ஷனும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாம்.

இன்னும் சில வாரங்களில் இவை அறிமுகப்படுத்தப்படும் என்று மார்க் தெளிவுபடுத்தியுள்ளார். மெட்டா நிறுவனத்திலிருந்து  வந்துள்ள புதிய ஆப்தான் திரெட்ஸ். டிவிட்டருக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஆப் படு வேகமாக டவுன்லோட் செய்யப்பட்டது. ஆனால் அதே வேகத்தில் இது பொலிவிழந்து போய் விட்டது.



டிவிட்டரை பயன்படுத்துவது போல இது எளிமையாக இல்லை என்பது  ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் டெஸ்க்டாப் வெர்ஷன் கிடையாது, சர்ச் ஆப்ஷன் இல்லை என்று ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இதனால் திரெட்ஸை டவுன்லோடு செய்து வைத்தவர்கள் பலரும் அதை பயன்படுத்தாமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் இன்னும் சில  வாரங்களில்  திரெட்ஸ் ஆப்பில் சர்ச் ஆப்ஷன், டெஸ்க்டாப் வெர்ஷன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார். டெஸ்க்டாப் வெர்ஷன் வந்து விட்டால் திரெட்ஸ் பயன்பாடு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

திரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதில் டிரான்ஸ்லேஷன் ஆப்ஷன் உள்ளிட்ட பல அறிமுகமாகின. தற்போது கூடுதலாக டெஸ்க் டாப் வெர்ஷன் இடம் பெறவுள்ளது. மக்களிடமிருந்து வந்துள்ள பல்வேறு யோசனைகள், கருத்துக்களை நாங்கள் ஆய்வு செய்து அதை நிவர்த்தி செய்வதில் ஆர்வமாக உள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார். 

திரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே  அது 100 மில்லியனுக்கும் மேலான டவுன்லோடுகளை சந்தித்து புதிய வரலாறு படைத்தது என்பது நினைவிருக்கலாம்.