டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு... மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த விவசாயிகள்!

Su.tha Arivalagan
Jan 07, 2025,06:01 PM IST

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், விவசாயிகள் ஊர்வலமாக வந்து, போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.


மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் அமைந்துள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஏலம் நடத்தியது. இதில் ஒரு பகுதியில் சுரங்கம் அமைக்கும் ஏலத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் என்ற நிறுவனம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 




தங்கள் பகுதியில் சுரங்கம் அமைத்தால் இப்பகுதியில் இயற்கை வளமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டத்திற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம் என்று கூறி விட்டது.


மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மதுரை கலெக்டரிமும் மனு அளித்திருந்தனர். இந்த திட்டத்திற்கு கிராம மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிராம மக்கள் கனிம வள சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி தொடர் போராட்டத்திலும் ஈடுபட துவங்கினர். இவர்களுக்கு ஆதரவாக பல கிராம மக்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கி வந்தனர்.


இதுவரை தங்கள் ஊர்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்த கிராம மக்கள், ஜனவரி 7ம் தேதியான இன்று தங்களின் கிராமங்களில் இருந்து பல கி.மீ., பேரணியாக நடந்து வந்து, மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர். கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் அலை அலையாக அவர்கள் அணிவகுத்து வந்ததால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


Watch: மதுரையை உலுக்கிய விவசாயிகள் பேரணி


தற்போது பல ஆயிரக்கணக்கான மக்கள், விவசாயிகள் தமுக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர். அங்கு தமிழன்னை சிலை முன்பாக பெண்கள் உள்ளிட்ட மக்கள் அப்படியே அமர்ந்து போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு ஆதரவாக பலரும் மதுரை தமுக்கம் மைதானத்தில் குவிந்து வருவதால் மதுரை புறவழிச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு வரும் சாலைகள் ஆகியவற்றில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.


சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை போல் மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த போராட்டத்திற்காக பெண்கள், வயதான மூதாட்டிகள் போன்றவர்களே அதிகம் கலந்து கொண்டுள்ளதால் அவர்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பு அளித்து, போக்குவரத்தை சரி செய்ய போலீசார் கடுமையாக போராடி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்