ஆயிரக்கணக்கில் "மம்மி ஆட்டுத் தலைகள்".. கோவிலுக்குள் புதையுண்டிருந்த அதிசயம்!
Mar 27, 2023,04:58 PM IST
கெய்ரோ: எகிப்து நாட்டின் அபிடோஸ் என்ற நகரில் உள்ள ஒரு பழமையான கோவிலுக்குள் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது ஆயிரக்கணக்கான ஆட்டுத் தலைகள் புதையுண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆடுகளும் உடல் பதப்படுத்தப்பட்ட "மம்மி"களாக இருக்கின்றன
கிட்டத்தட்ட 2000 மம்மி ஆட்டுத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2ம் ராம்சேஸ் பாரோ மன்னர் ஆட்சிக்காலத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட ஆடுகளாக இவை இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆடுகள் மட்டுமல்லாமல், நாய்கள், பசுக்கள், குரங்குகள் என்று பல்வேறு வகையான விலங்குகளின் தலைகளும் மம்மியாக இங்கு காட்சி தருகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் ஆய்வின்போது இவை கண்டுபிடிக்கப்பட்டன. அபிடோஸ் நகரில் ஏராளமான புராதனக் கோவில்கள், சமாதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்கக் குழுவின் தலைவரான சமே இஸ்கந்தர் கூறுகையில், இந்த விலங்குகள் எல்லாம் கோவிலுக்குக் காணிக்கையாக பலியிடப்பட்டவையாகும். 2ம் ராம்சேஸ் மன்னர் எகிப்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. அவரது காலமானது கிமு 1304 முதல் 1237 ஆகும். புதிய கண்டுபிடிப்பு மூலம் இந்தக் கோவிலின் வரலாறு மன்னர் ராம்சேஸின் ஆட்சி முறை குறித்து மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் அவர்.