வெயிட்டர் வேலைக்கு ஆள் தேவை.. ஆயிரக்கணக்கில் குவிந்த இந்தியர்கள்.. அதிர வைக்கும் வீடியோ!
பிராம்ப்டன், கனடா: கனடாவின் பிராம்ப்டன் நகரில் ஒரு ஹோட்டலில் காலியாக உள்ள வெயிட்டர், சர்வர் வேலைக்கு விண்ணப்பிக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவருமே மாணவ, மாணவியர். பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கிட்டத்தட்ட 3000 பேர் அங்கு குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிராம்ப்டன் நகரில் உள்ள தந்தூரி பிளேம் என்ற ரெஸ்டாரென்ட்டுக்கு வெளியேதான் இந்தக் கூட்டம் கூடியிருந்தது.
இந்த ஹோட்டலில் வெயிட்டர்கள், சர்வர்கள் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் வெளியாகியிருந்தது. இதைப் பார்த்து வெளிநாட்டு மாணவ, மாணவியர் குவிந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பார்ட் டைம் வேலை இது. வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவியர் பார்ட் டைமாக இது போல வேலை பார்த்துக் கொண்டு சம்பாதிப்பது வழக்கம்தான். அப்போதுதான் அங்கு தங்களுக்கான செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியும். எனவே இதுபோன்ற வேலைகளில் பெரும்பாலும் வெளிநாட்டவர்தான் அதிகம் இருப்பார்கள்.
ஆனால் கனடா ஹோட்டலில் சர்வர் வெயிட்டர் வேலைக்கு இந்த அளவுக்கு அதிக அளவிலான மாணவர்கள், குறிப்பாக இந்தியர்கள் குவிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு கேள்விகளையும் அது எழுப்பியுள்ளது. கனடாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறதா என்ற விவாதத்திலும் சிலர் இறங்கியுள்ளனர். இந்தியர்கள் கனடா வருவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையையும் இது கிளறி விட்டுள்ளதாகவும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் பெரும்பாலும் இது பார்ட் டைம் வேலையாகத்தான் இருக்க முடியும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்போர் பெரும்பாலும் மாணவர்களாகத்தான் இருக்க முடியும். அப்படி இருந்தால், இதை வேலையில்லாத் திண்டாட்டமாக பார்க்க முடியாது என்று சிலர் விளக்கம் கொடுக்கிறார்கள்.
எது எப்படியோ இந்த வீடியோ பல்வேறு விவாதங்களை எழுப்பி வைரலாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்