சரமாரி வேலைநீக்கம்.. ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள்.. அமெரிக்காவில் தவிப்பு!
Jan 25, 2023,10:02 AM IST
வாஷிங்டன்: கூகுள், மைக்ரோசாப்ட், அமேஸான் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் சரமாரியாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவதால் வேலையை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்காவில் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூகுள், டிவிட்டர், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேஸான் என முக்கிய நிறுவனங்கள் இதில் அடக்கம். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் வரை இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எச்1 பி மற்றும் எல்1 விசாவில் இருப்பவர்கள். தங்களது ஒர்க் பெர்மிட் முடிவதற்குள் வேறு வேலையைத் தேட வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இப்போது உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்களில், இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எச்1பி விசா வைத்திருப்போர் புதிய வேலையில் 60 நாட்களுக்குள் சேர வேண்டும். வேலை கிடைக்காவிட்டால் இந்தியா திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்கிறார்கள்.
தற்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆட்குறைப்பில் ஈடுபட்டிருப்பதால் புதிய வேலை கிடைப்பது மிக மிக கடினம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.