2021 ஆம் ஆண்டுக்கு பிறகு.. மீண்டும் டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்.. உச்சகட்ட பாதுகாப்பு!
சென்னை: குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து டெல்லி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக லாரிகள், டூவீலர்கள், டிராக்டர்களில் புறப்பட்டு வர ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச எல்லைகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, பஞ்சாப், ஹரியானா மாநில எல்லைப் பகுதிகளில் துணை ராணுவ படைகளை குவித்து டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வில்லை என்று கூறி, மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விவசாயிகளின் தொடர் முற்றுகைப் போராட்டத்தின் போது 800 விவசாயிகள் கடும் பனி உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தனர். 2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் நடந்தது போல் தற்போது நடந்து விடக் கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை தடுப்பதற்கு 144 சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சுமார் ஆறரை மணி நேரம் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்படிக்கையும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் திட்டமிட்டபடி பேரணியை டெல்லியை நோக்கி நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து, மத்திய அரசுத் தரப்பில், எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். வேண்டுமென்றால் ஒரு குழு அமைத்து ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை. இன்று காலை 10 மணி வரை மத்திய அரசுக்கு விவசாயப் பிரதிநிதிகள் கெடு விதித்திருந்தனர். தற்போது கெடு முடிந்த நிலையில், மத்திய அரசின் சார்பில் இதுவரை எந்த உறுதிமொழியும் அளிக்காததால், விவசாயிகள் இந்த போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கண்ணீர்ப் புகை குண்டு வீசிக் கலைப்பு
பஞ்சாப் மாநிலம் பத்தேகர் சாகிப் என்ற இடத்தில் டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கி செல்கின்றனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டத்திற்காக சாம்பு எல்லைப் பகுதி வழியாக சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய தயாராக உள்ளனர்.
டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், மாநிலங்களிலிருந்து விவசாயிகள் குவிவதால் டெல்லி எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் சாம்பு பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த விவசாயிகளைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதால் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.