ஆசியாவிலேயே புகழ்பெற்ற.. திருவாரூர் ஆழி தேரோட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
திருவாரூர்: உலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய கோவில் திருவிழா, திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர்த் திருவிழாதான். இது ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான தேர். இதற்கு "ஆழி தேர்" என்ற பெயர் உண்டு. இந்த தேர் பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது.
திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டது. தேர் நான்கு நிலைகளை உடையது. தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. இந்த தேரில் ரிக்,யஜுர், சாம, அதர்வன என்ற நான்கு வேதங்களை நினைவுபடுத்தும் விதமாக நான்கு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது.
திருவாரூர் தேர் சிறப்பாக கொண்டாடுவதற்கான வரலாறு:
திருவாரூரை ஆண்டவர் மனுநீதி சோழன். அந்த காலகட்டத்தில் யார் எந்த செயலில் துன்பம் இளைத்தாலும் அவர்களுக்கு சரியான நீதி வழங்க வேண்டும் என கூறி வந்தார். அதற்காக ஊர் எல்லையில் மணி ஒன்றைக் கட்டி யாருக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும் இந்த மணியை அடித்தால் அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கும் என்ற கோட்பாடுகளை வரையறுத்தவர்.
அப்போது மனுநீதி சோழனின் மகன் பசுவின் கன்றுக்கு அநீதி இழைத்தான். அதாவது அவன் ஓட்டிச் சென்ற தேர் மோதி கன்றுக் குட்டி பலியானது. இதன் காரணமாக தாய்ப் பசு மணி அடித்து நீதி கேட்டது. பசுவிற்கு நீதி வழங்க வேண்டும் என தன் மகனையே தேர் ஏற்றி கொன்றவர் மனுநீதி சோழன்.
இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக மக்கள் கோயிலுக்கு வடக்கே கல்தேரை வடிவமைத்துள்ளனர். இதன் மூலமாகவே திருவாரூர் தியாகராஜர் ஆழி தேர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.
தமிழகத்தில் சைவத்தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் பஞ்சபூதங்களில் பூமி ஸ்தலமாக திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முதல் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். பங்குனி மாதத்தில் வரும் ஆயில்யம் நட்சத்திரத்தில் திருவாரூர் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
ஆழித் தேரில் தியாகராஜர் மற்றும் அம்பாள் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து வரும் கண்கொள்ளாக் காட்சியை சொல்ல முடியாது. அதன் அழகை ரசிப்பதற்கு இரு கண்கள் போதாது. தேரில் எழுந்தருளிய தியாகராஜரை தரிசிக்க பக்த கோடிகள் வெளி ஊர்களில் இருந்தும் அலைக்கடலென திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். தேரை இழுத்து உணர்ச்சி பொங்க சாமி தரிசனம் செய்தனர். சுவாமியை தரிசனம் செய்யும் போது ஆருத்ரா.. தியாகேஷா.. வாரே.. வா என்ற கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்கின்றனர்.